மீண்டும் இன்ஜினியரிங்கில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்!

Published On:

| By Balaji

கடந்த இரண்டு ஆண்டுகளை விட நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களிடையே பொறியியல் படிப்புக்கு அதிகளவில் ஆர்வம் இருந்தது. அதனால், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வெளியே வரும் மாணவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது. மாறாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்பு விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 24 வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதியும், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 21 மற்றும் 22ஆம் தேதி என இரண்டு நாட்கள் மாணவர்கள் விரும்பிய பாடம், மற்றும் கல்லூரிகள் தேர்வு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வு நேற்று நிறைவடைந்தது.

நான்கு கட்ட கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வு முடிவில் இந்த ஆண்டு 440 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் 96,069 மாணவர்களுக்கு சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது .

ADVERTISEMENT

கடந்த 2019ஆம் ஆண்டு 83,396 பேரும், கடந்த ஆண்டு 78 ஆயிரத்து 682 பேரும் பொறியியல் படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 95 ஆயிரத்து 69 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 17 ஆயிரம் இடங்கள் (14%) அதிகமாகும். கடந்தாண்டு 13 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்கள் நிரம்பிய நிலையில், இந்தாண்டு 16 பொறியியல் கல்லூரிகளில் 100 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன.

கணினி பொறியியல் பாடப்பிரிவை மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர். இதற்கடுத்தப்படியாக, மெக்கானிக்கல் பாடப்பிரிவினையும், சிவில் பாடப்பிரிவினையும் மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

2021-22 ஆம் ஆண்டிற்கான இளங்கலை கட்டிடகலை படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை (அக்டோபர் 25) தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share