காப்பி அடிப்பதைத் தடுக்க…: கல்லூரியின் விநோத ஐடியா!

Published On:

| By Balaji

தேர்வில் காப்பி அடிப்பதை தடுப்பதற்காக மாணவர்கள் தலையில் பெட்டியைக் கவிழ்த்துத் தேர்வு எழுத கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் பாகத் பியு என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இடைநிலை தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று வேதியியல் தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வின் போது மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து எழுதுவதைத் தடுப்பதற்காக ஒரு கொடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். தேர்வு எழுதும் மாணவர்களின் தலையில் அட்டை பெட்டியைக் கவிழ்த்து வைக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் இதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இது வேடிக்கையான செயல் என்று சிலர் கருத்து தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காப்பி அடிப்பதை தடுக்க இப்படி ஒரு முறையா, இப்படிச் செய்தால் மாணவர்களால் எப்படித் தேர்வு எழுத முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாகக் கர்நாடக டிபிஐயின் துணை இயக்குநர் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, இதுகுறித்து அம்மாநில கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களை விலங்குகள் போன்று நடத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. இந்த முறையற்ற செயலுக்குக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கடந்த தேர்வின் போது, மாணவர்கள் தேர்வுகளில் அதிகளவு காப்பி அடித்ததாகக் கூறி கல்லூரி நிர்வாகம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share