முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படம் கொண்ட கைக்குட்டையை மாணவர் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. Student who showed Vijay picture at CM event
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சாகித்ய அகாடமி, ஜவஹர்லால் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 27) தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தனர்.
விழா தொடங்குவதற்கு முன்பாக அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கைக்குட்டையை உயர்த்தி காண்பித்திருக்கிறார். மற்ற சில மாணவர்கள் அதை உற்சாகப்படுத்தும் வகையில் சிரித்திருக்கின்றனர்.
இதனால் கலைவாணர் அரங்கத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களை எச்சரித்துள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீசார் அந்த மாணவர்களை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் ஒரு மாணவர் தப்பியோடியதாகவும் தகவல்கள் வருகின்றன.
குறிப்பாக கைக்குட்டையை உயர்த்தி காட்டிய மாணவர் ரமணா என்பதும், அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியில் தமிழ்த் துறையில் படித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தசூழலில் முதல்வர் உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் முறையாக சோதனை நடத்தப்பட்டதா. அப்படி சோதனை நடத்தப்பட்டிருந்தால் மாணவர்கள் எப்படி மற்றொரு கட்சி தலைவரான விஜய்யின் படம் குறித்த கைக்குட்டையை கொண்டு சென்றிருக்க முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. Student who showed Vijay picture at CM event
