சிவகாசி அருகே கனமழையில் வீடு இடிந்து விழுந்ததில் 17-வயது நர்சிங் மாணவி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் சாலையை சேர்ந்தவர் வீரமணி-ராதா தம்பதியின் மகள் பவானி(17) தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பவானி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, கனமழையில் அவர் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த பவானியை உறவினர்கள் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த பவானி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
