சத்துணவில் முட்டை எங்கே என்று கேட்ட அரசு பள்ளி மாணவனை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் தாக்கியுள்ளனர். student ask egg Midday Meal staff attacked
அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம், மதிய உணவு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் சில சமயங்களில், கெட்டுப் போன முட்டை வழங்கப்படுவதாகவும், பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
இந்தநிலையில் சத்துணவு கேட்ட அரசுபள்ளி மாணவனை சத்துணவு ஊழியர்கள் துடைப்பத்தால் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், மாணவனின் கையை ஒரு ஊழியர் இழுத்து பிடிக்க, இன்னொருவர் துடைப்பத்தால் கடுமையாக தாக்குகிறார். இதனால் அந்த மாணவன் வலி தாங்கமுடியாமல் டீச்சர் டீச்சர் என்று கத்தி கதறுகிறான். இதனை மற்ற மாணவ மாணவிகள் வேடிக்கை பார்க்கின்றனர். இருந்தும் விடாமல், அந்த மாணவனை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவம் இன்று (ஏப்ரல் 4) திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்துள்ளது.
இந்த பள்ளியில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டபோது முட்டை வழங்கவில்லை .
இந்தநிலையில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஜோதி ஈஸ்வரனும், அவனுடைய நண்பனும் சமையலறை சென்று பார்த்தபோது முட்டை இருந்துள்ளது.
“பாருடா… முட்டை இருக்கிறது.. ஆனால் தரமாட்டிங்குறாங்க “என்று சொல்லிக்கொண்டே அந்த முட்டையை எடுத்திருக்கின்றனர்.
அப்போது அங்கு வந்த சத்துணவு ஊழியர்களான சமையல்காரர் லட்சுமி, அவருடைய உதவியாளர் முனியம்மாவிடமும் முட்டையை வைத்துக்கொண்டே ஏன் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளான் ஜோதி ஈஸ்வரன்.
இந்தநிலையில் தான் கோபடைந்த அவர்கள் சிறுவனை போட்டு தாக்கியுள்ளனர்.
இதனை ஐந்தாம் வகுப்பு ஆசிரியை ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வெளியாகி, கண்டனத்தை பெற்று வரும் நிலையில் கல்வித் துறை அதிகாரிகளும், போலீசாரும் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சத்துணவு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தனர். இந்நிலையில் இந்த சத்துணவு ஊழியர்களும், அடிவாங்கிய மாணவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்த ஊர் மக்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், இவர்களை கைது செய்ய வேண்டாம் என்று போலீசாரிடம் பேசி வருகின்றனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே அந்த ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. student ask egg Midday Meal staff attacked