அரசியல் அரிக்காய்ச்சல் – ஸ்ட்ராங் ரூம் டூட்டி: மூன்று ஷிப்ட், வேட்பாளர்களுக்கு முக்கிய செலவு!

Published On:

| By Balaji

பிப்ரவரி 26ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கிய தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியின் மிக முக்கியமான நாளான வாக்குப் பதிவு நேற்று ஏப்ரல் 6 நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் இத்தோடு இது முடிந்துவிடவில்லை… வரும் மே 2ஆம் தேதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருக்கும் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகுதான் இந்தத் தேர்தல் பணி முழுமையடையும். ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிந்தாலும், மே 2ஆம் தேதிவரை தேர்தல் பணி தொடர்கிறது.

டெல்டா மாவட்ட கிராமங்களில் முன்பெல்லாம் (இயந்திரம் மூலமாக அல்லாமல் நடக்கும்) அறுவடை முடிந்த அன்று, விளைந்த கதிர் கட்டுகளை ஒரு நாள் இரவு வயலிலேயே வைத்திருப்பார்கள். அதற்கு அரிக்காய்ச்சல் என்று பெயர். அதாவது அறுவடையான கட்டுகளை ஒருநாள் இரவு காயவைப்பதன் மூலம் மறுநாள், களத்தில் அவற்றை அடிக்கும்போது நெல்மணிகள் எளிதாக உதிர்ந்திடும். ஈரப்பதமும் இருக்காது. இதற்காக அறுவடை முடிந்த ஒரு நாள் இரவு வயலிலேயே கட்டிலைப் போட்டு கண்விழித்து காவல் பணி செய்வார்கள் விவசாயிகள்.

விவசாயிகளின் அறுவடை அரிக்காய்ச்சல் ஓர் இரவு என்றால், இப்போது இந்த வாக்குகளை அறுவடை செய்து இயந்திரங்களில் வைத்து அவற்றை சுமார் 26 நாட்கள் காய விடுகிறார்கள். ஓர் இரவு அரிக்காய்ச்சலைப் பாதுகாப்பது எப்படி விவசாயிக்கு விவசாயம் பார்த்த நாட்களை விட இன்றியமையாததோ அதேபோலத்தான், வாக்கு அறுவடை நடத்திய அரசியல் விவசாயிகளுக்கும் இந்த 26 நாட்கள் அரிக்காய்ச்சல் பாதுகாப்புப் பணி முக்கியமானது.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த ஏப்ரல் 4ஆம் தேதி மதியமே ஏப்ரல் 6ஆம் தேதி மாலை முதல் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வரை, வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருக்கும் ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்புப் பணிக்கு எத்தனை பேர் என்ற பட்டியலை திமுக, அதிமுக ஆகிய கூட்டணியினர் தயாரித்துவிட்டனர்.

ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட், ஒரு ஷிப்ட்டுக்கு எட்டு மணி நேரம் வீதம் ஒரு நாள் முழுவதற்கும் மூன்று டீம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு டீமில் 30 பேர் என்று மூன்று டீமுக்கும் 90 பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த 90 பேர் கொண்ட டீம் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஷிப்ட்டில் ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள பகுதியைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும்.

திமுக கூட்டணியில் திமுக போட்டியிடும் தொகுதி என்றால் இந்த 30 பேரில் 10 பேர் திமுகவினர், 5 பேர் காங்கிரஸ் கட்சியினர், மீதி 15 பேர் கூட்டணிக் கட்சியினர் என்றும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி என்றால் ஒரு குழுவின் 30 பேரில் காங்கிரஸ் கட்சியினர் 10 பேராக இருப்பார்கள். இவ்வாறு அந்தந்த கட்சி போட்டியிடும் தொகுதிக்கேற்ப அந்தந்த கட்சியினரின் எண்ணிக்கை அமைந்திருக்கும். அதிமுக கூட்டணியிலும் இதுபோலவே அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த 30 x 3 = 90 பேருக்கும் தினசரி உணவு,எக்ஸ்ட்ரா செலவுகளை சம்பந்தப்பட்ட வேட்பாளரே கவனித்துக் கொள்ள வேண்டும். அரிக்காய்ச்சலின் ஓனர் அந்த வேட்பாளர்தானே… இந்த வகையில் திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளும் ஒவ்வொரு ஸ்ட்ராங் ரூமுக்கும் ஒரு ஷிப்ட்டுக்கு 30 பேர் என அதிகபட்சம் ஒரு நாளைக்கு 90 பேர்களை அமர்த்தியிருக்கிறார்கள். இவர்களைத் தவிர தேர்தல் ஆணையத்தின் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் ஸ்ட்ராங் ரூமைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஏற்பாடுகளை வலியுறுத்தித்தான் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் முடிந்த உடனேயே, ‘தேர்தல் பணி தொடர்கிறது’ என்று குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணியின் பணபலம் – அதிகார பலம் ஆகியவற்றை மீறியும் – ஆங்காங்கே காவல்துறையினரின் அடக்குமுறைகளைச் சமாளித்தும் கழகத்தினரும் – கூட்டணிக் கட்சித் தோழர்களும் தேர்தல் பணியாற்றி இருப்பது பாராட்டுக்குரியது.

அமைச்சர்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் கழக வேட்பாளர்களும், கழக முன்னணியினரும் களத்தில் நின்று பணியாற்றி இன்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பேருதவியாக நின்று ஆக்கபூர்வமான ஜனநாயகக் கடமையாற்றியிருப்பது போற்றுதலுக்குரியது.

வாக்குச் சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் கொண்டு வந்து வைக்கப்பட்ட பிறகு, அவற்றை காவல்துறையும் – தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று நம் வேட்பாளர்கள் இருந்திடலாகாது.

ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் – மதுரை மக்களவைத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் அதிகாரிகள் சிலர் அனுமதியின்றி நுழைந்ததை நாம் இந்த நேரத்தில் மறந்துவிடக் கூடாது.

எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பது நம் தலையாயக் கடமையாகிறது.

எனவே, கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் – கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அனைவரும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட மையங்களில் மிகுந்த கவனத்துடனும் – எச்சரிக்கையுடனும், 24 மணி நேரமும் – இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

காவல்துறையின் பணி என்று நினைத்து கழக வேட்பாளர்கள் – தோழர்கள் கவனக்குறைவாக இருந்திடாமல் – வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் உள்ள இடைப்பட்ட காலத்தில், மிகுந்த விழிப்புணர்வுடன் “டர்ன் டியூட்டி அடிப்படையில்” அமர்ந்து – கண்காணித்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வயலில் அறுவடை செய்து கிடக்கும் ஒவ்வொரு நெல்மணியும் வீட்டுக்கு வந்து சேரும் நாளே விவசாயியின் பொன்னாள் அல்லவா!

**-வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share