தெற்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி இன்று (அக்டோபர் 20) காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகியுள்ளது.
இது மேலும், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய மேற்குப் பகுதியில் நிலைகொள்ளும் என்றும் அது தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் புயலுக்குத் தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ’சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
