சாலையைச் சீரமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம்!

Published On:

| By admin

மயிலாடுதுறை அருகே மோசமாக உள்ள சாலையைச் சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே நல்லதுக்குடி கிராமத்தில் பெருமாள் கோயில் வடக்கு தெருவில் இருந்து கலைஞர் காலனி, அம்பேத்கார் தெரு வழியாக நடுத்தெரு வரை ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் புதிய சாலை அமைக்கும் பணிக்காக கடந்த மாதம் 8ஆம் தேதி பெருமாள் கோயில் வடக்கு தெருவில் இருந்து நடுத்தெரு வரை ஒன்றரை கிலோமீட்டர் தூரம் பழைய சாலை கொத்தி பெயர்த்து போடப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
கொத்தி போடப்பட்ட அந்தச் சாலையில் கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அதில் மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் அதை ஓட்டிச் செல்ல முடியாததால் தள்ளி சென்று வருகிறார்கள். கார், லாரி போன்ற வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களில் சிலர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் இருந்து நல்லத்துக்குடி வழியாக கோடங்குடிக்கு ஒரு டவுன் பஸ் மட்டுமே சென்று வருகிறது. அந்த டவுன் பஸ் நேற்று காலை கோடங்குடிக்குச் சென்று விட்டு திரும்பி நல்லத்துக்குடியைக் கடந்தபோது திடீரென மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள் தங்கள் சைக்கிள்களை சாலையின் குறுக்கே கீழே சாய்த்து போட்டு கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை சீரமைக்கப்படும் என்றனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share