தமிழகத்தில் நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் சாலைகளில் செல்பவர்களை துரத்தி கடிக்கும் பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன் தினம் பிட்புல் ரக வளர்ப்பு நாய் கடித்ததில் சமையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் நாயின் உரிமையாளர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” செல்லப் பிராணிகள் வளர்க்க கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி திரியவிட்டாலோ / அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது மக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது. மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப் பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். செல்லப் பிராணியை அழைத்துச் செல்லும் பொழுது மற்றவர்கள் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் உரிமம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படும். விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டு இருக்கக் கூடும்.
இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. பொது இடங்கள், லிப்ட்கள் ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும் மற்றவர்களுக்கு அச்சமூட்டும் வகையிலோ (அ) அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.
இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
இதனை மீறி உரிமம் பெறாமல் மற்றும் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை, பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றைப் பொது இடங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அவ்வாறான நாய்கள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படியும், பொது மக்களின் உடல் அல்லது மன அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்களின் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளின்படியும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
