நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு மாற்றாக ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் அதிகம் லாபம் கிடைத்து வருவதால் ஊட்டி விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
குளிர்ந்த காலநிலையைக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக பச்சை தேயிலை கொள்முதல் விலை சரிவில் இருப்பதால் விவசாயிகள், மாற்று சாகுபடியில் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கொய்மலர், ஸ்ட்ராபெர்ரி மற்றும் மூலிகை தாவர வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ட்ராபெர்ரி மற்றும் கொய்மலர்களுக்கு வெளி மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருப்பதால் அனுப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெர்ரி ரூ.400 வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள குன்னூர் விவசாயிகள், “கேமரோஸா, ஸ்வீட் சார்லி போன்ற ஸ்ட்ராபெர்ரி ரகங்களை பயிரிட்டு வருகிறோம். வழக்கமாக கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விலை கிடைக்கும். தற்போது விலை அதிகரித்து வருகிறது. A,B,C என மூன்று ரகங்களாக பிரித்து அனுப்புகிறோம். முதல் ரகத்திற்கு கிலோ 400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது” என்று கூறியுள்ளனர்.
நீலகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி, “நீலகிரியில் நிலவும் இதமான காலநிலை ஸ்ட்ராபெர்ரி உற்பத்திக்கு ஏற்றதாக இருக்கிறது. ஆனால், சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ட்ராபெர்ரி சாகுபடி பரப்பளவை உயர்த்தவும் தேவையான மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: க்ரீம் ஆஃப் வெஜிடபிள் சூப்
மருத்துவரே இல்லாமல் செயல்படும் ஆழியாறு ஆரம்ப சுகாதார நிலையம்!
புதுப்பொலிவு பெறும் கன்னியாகுமரி: கண்ணாடி பாலத்தைத் திறந்து வைக்கும் முதல்வர்!
29 ஆண்டுகள்… முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை… ஏ.ஆர்.ரகுமான் – சாய்ரா பானு விவாகரத்து!