சிறப்புக் கட்டுரை: அமைதியை விரும்பும் யூதர்!

Published On:

| By Balaji

நிவேதிதா லூயிஸ்

இரண்டாம் உலகப்போரில் நாஜிகளால் பெருமளவு இன அழிப்புக்கு உள்ளானவர்களில் யூதர்களும் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பலர் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகவும், செல்வந்தர்களாகவும், கலைஞர்களாகவும, அரசியல் அதிகாரம் மிக்கவர்களாகவும் உலகெங்கும் வியாபித்து இருக்கிறார்கள். சென்னையிலும் ஒரு காலத்தில் குடியேறி புகழ்பெற்ற வணிகர்களாக இருந்திருக்கிறார்கள்; அவர்களது சந்ததிகள் இன்றும் சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இக்கட்டுரை சென்னையின் யூதர்களைப் பேசுகிறது.

ADVERTISEMENT

மதராஸ் யூதக் கோயிலில் சில நூற்றாண்டுகளாக வழிபடப்பட்ட ஆட்டுத் தோலில் எழுதப்பட்ட யூதப் புனித நூலான தோராவைப் பாதுகாக்கும் பேழை, “ஆரோன் கோதேஷ்”

1688ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த “செஃபர்தி யூதக்” (Sephardic Jew) கவிஞரான தானியல் லெவி தி பரியோ (Daniel Levi De Barrios) எழுதிய கவிதை ஒன்றில், “ஸெக்ஸ்டா என் மெட்ராஸ் படன்” (Sexta En Madras Patan) என்று சென்னைப் பட்டணம் பற்றிய குறிப்பு உள்ளது. ‘ஆங்கிலேயர் ஆட்சியின் கீழுள்ள ஆறு நகரங்களில், ஆறு புனிதமான யூதக் குடிகள் உள்ளன. நீவ், லண்டன், ஜமைக்காவிலும், பார்படாஸில் இரண்டு குடிகள் என ஐந்தும், ஆறாவது குடி மதராஸ பட்டணத்திலும் அமைந்துள்ளன’, என்பது அந்தப் பாடலின் பொருளாகும். சென்னை நகரில் யூதர்கள் இருந்ததை இவ்வாறு 17ஆம் நூற்றாண்டுப் பாடல் பதிவு செய்கிறது.

ADVERTISEMENT

யாரிந்த செஃபர்தி யூதர்கள், அவர்கள் சென்னை வந்தது எப்படி?

யூதர் என்ற தனி இன மற்றும் மதக்குழு, பழைய விவிலியத்தின் ஆபிரகாமிடமிருந்தே தோன்றியதாக ஹீப்ரூ மொழி விவிலியம் சொல்கிறது. மேலும் ஆபிரகாமின் மகனான ஈசாக்கு, அவரது மகன் யாக்கோபு, மற்றும் கானான் தேசத்தில் வாழ்ந்த சாரா, ரெபெக்கா, லியா, ரக்கேல் போன்றவர்களது வழித்தோன்றல்களே யூதர்கள் என்கிறது. யூதர்களின் 12 குலங்கள், யாக்கோபின் 12 பிள்ளைகளின் வழிவந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அசிரியப் போர்களில் அழிக்கப்பட்ட 9 குலங்கள் போக, இப்போது எஞ்சியிருப்பது, யூதா, பெஞ்சமின் குலத்தவர் மற்றும் லேவியின் குலம் வழிவந்த சொற்ப நபர்களே. இன்றைய நவீன யூதர்கள் அனைவரும் இந்த மூன்று மரபின் வழித்தோன்றல்களாவர்.

சென்னை வந்த யூதர்கள்

அக்காலத்தில் சொந்த தேசமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி வசித்துவந்த யூதர்களை மூன்று வகையினராகப் பிரிக்கிறார்கள். அவர்கள் அஷ்கெனசி (Ashkenazi)- ஜெர்மனியில் வாழ்ந்தவர்கள், செஃபர்தி (Sephardi) – ஸ்பெயின், போர்ச்சுகல், வட அமெரிக்காவில் வசித்தவர்கள், மற்றும் மிஸ்ரஹிம் (Mizrahim) – கிழக்குப் பகுதிகளில் வசித்த ஐரோப்பியரல்லாதோர் ஆவார்கள். ‘ஸ்பெயின்’ என்பதன் ஹீப்ரூ மொழிச் சொல் செஃபரத். அந்நாட்டில் தஞ்சம் புகுந்து 15ஆம் நூற்றாண்டுவாக்கில் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்கள் செஃபர்தி யூதர்கள். அங்கு வசித்த பெரும்பான்மை கத்தோலிக்கரல்லாத வேற்று மதத்தினரை, யூதர்கள் தங்கள் யூத மதத்திற்கு மாற்றிவருவதாக ஸ்பெயின் முடியாட்சி நினைத்தது.

ADVERTISEMENT

அதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 31 மார்ச், 1492 அன்று ‘அல்ஆம்பராக் கட்டளை’ (Alhambra Decree) என்ற ஆணை பிறப்பித்தது. இதன் மூலம் ஐபீரிய தீபகற்பத்தில் வசித்து வந்த யூதர்ளை ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளியேறுமாறு ஆணையிட்டார்கள் அந்நாட்டின் மன்னரான ஃபெர்தினாந்து மற்றும் அரசி இசபெல்லா. இதனால் அம்மக்கள் சந்தித்த பிரச்னைகள் கணக்கிலடங்காதவை. மதமாற்றங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்தல், அரசுக் கொலைகள், தலைமறைவு என்று சிதறுண்டு போனார்கள் இந்த செஃபர்தி யூதர்கள். அப்படித் தப்பிவந்தவர்களில் சிலர் போர்த்துகீசிய மற்றும் ஸ்பானிஷ் நாட்டுக் கப்பல்கள் மூலம் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையையும், மதராசப் பட்டணத்தையும் வந்தடைந்தவர்கள்.

மலபார் கடற்கரைப் பகுதிகளில் கிபி 1ஆம் நூற்றாண்டு முதலே யூதர்கள் வணிகம் செய்து வந்ததாக சொல்லப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் தற்போது நம்மிடம் இல்லை. 11ஆம் நூற்றாண்டுவாக்கில் கொடுங்கல்லூர் யூத மக்களின் தலைவனும், அஞ்சுவண்ண வணிகர் குழுவின் உறுப்பினருமான யோசேப்பு ரப்பனுடன் மன்னன் சேரமான் பெருமான் செய்துகொண்ட உடன்படிக்கையை ஆதாரமாகக் கொண்டால், மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்த மக்கள் குறைந்த பட்சம் 11ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. தென்னிந்தியர்களைப் போன்ற சரும வண்ணம் கொண்ட இந்தக் கொச்சின் யூதர்கள், புதிதாக 16ஆம் நூற்றாண்டில் ஹாலந்து, ஸ்பெயின், போர்ச்சுகலிலிருந்து வந்திறங்கிய யூதர்களை, ‘பரதேசி யூதர்கள்’ (Paradesi Jews) என்று அழைத்தார்கள். இந்தப் புதிய யூதர்கள் ஐரோப்பிய வண்ணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை வெள்ளை யூதர்கள் என்றும் சொல்வதுண்டு.

அப்படி மதராஸில் வந்திறங்கிய இந்த வெள்ளை யூதர்கள் ஒரு காலத்தில் பெரும் செல்வாக்குடன் இங்கு இருந்திருக்கிறார்கள். 1681ஆம் ஆண்டு சால்வடார் ரோட்ரிக்ஸ் என்ற யூதர் அனுமதியின்றி மதராசுக்குள் நுழைந்திருக்கிறார் என்று தேடுதல் அறிவிப்பொன்றை கிழக்கிந்தியக் கம்பெனி வெளியிட்டது. 1686ஆம் ஆண்டு இதே ரோட்ரிக்ஸ், கோல்கொண்டா அரசவையில் நடப்பவற்றை ஆங்கிலேயருக்குத் தகவல் தரும் ஒற்றராக நியமிக்கப்பட்டார்.

“யூதர்களின் வணிகத் தொடர்புகள் உலகளாவ இருந்தன. வைரம், பவளம், தங்கம் என்று விலையுயர்ந்த பொருள்களை ஆய்வு செய்து, திறம்படத் தரம் பிரிக்க அறிந்திருந்தார்கள். இந்தத் திறமை மற்றும் உலகம் முழுக்க வியாபித்திருந்த அவர்கள் இனக்குழுக்களுடன் இருந்த நெருக்கமானத் தொடர்புகள், அவர்களை ஆங்கிலேயருக்கு தொழில்முறை நண்பர்களாக மாற்றியது. போர்ச்சுகீசியர் ஆங்கிலேயருடன் கொண்டிருந்த தொழில்சார் ‘தனி உரிமையை’ உடைத்தவர்கள் யூதர்கள்”, என்று சொல்கிறார் சென்னையில் வசிக்கும் இறுதி யூதர்களில் ஒருவரான தாவீது லேவி.

தாவீது லேவி- சென்னையின் ஒரே யூதர்; படம்: தாவீது லேவி

சென்னையும் யூதர்களும்

“கோல்கொண்டா சுரங்கங்களில் கிடைக்கும் வைரங்கள் இங்கிருந்து கப்பல்கள் மூலம் ஆம்ஸ்டர்டாம் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள யூதர்களால் வெட்டி, பட்டை தீட்டப்பட்டன. அவை அதே கப்பல்களில் இங்கிலாந்து கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள யூதர்கள் மூலம் விற்கப்பட்டு, பெரும் பொருளீட்டப்பட்டது. அந்தப் பணத்தைக் கொண்டு, இத்தாலியின் லெகார்ன் பகுதியிலிருந்து பவளப்பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, அதே கப்பல்களில் மதராஸுக்கு அனுப்பப்பட்டன. லெகார்னிலிருந்து இங்கு பவளம் கொண்டு வரும் கப்பல்கள், கோல்கொண்டா சரக்கை ஏற்றிக்கொண்டு 12 மாதங்களுக்குள் மீண்டும் மதராஸுக்குத் திரும்ப வேண்டும் என்பது யூதரிடையே எழுதப்படாத விதியாக இருந்தது.”

“கப்பல்களில் யூதர்கள் அனுப்பும் சரக்குப் பெட்டிகளின் மேல் ‘மாகன் டேவிட்’ (Magen David- Star of David)) என்ற தாவீதின் அறுமுனை நட்சத்திர அடையாளம் வரையப்பட்டிருக்கும். மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்திலும் யூதர்களின் நெருங்கிய குடும்பத்தினரும், உறவினரும் வசித்துவந்தது, வணிகத்துக்குப் பெரிதும் உதவியாக இருந்தது”, என்றும் தாவீது சொல்கிறார். இந்த யூதர்களில் சிலர் ஜார்ஜ் கோட்டைக்குள் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பலர் கறுப்பர் நகரத்தின் பவளக்காரத் தெருவில் வாழ்ந்தார்கள். பவள வணிகத்தில் ஈடுபட்ட யூத மக்கள் வாழ்ந்த பகுதி என்பதாலேயே அந்தத் தெருவுக்கு பவளக்காரத் தெரு என்ற பெயர் அமைந்தது.

13 பிப்ரவரி, 1685 அன்று ஜேம்ஸ் டி பைவா (ஜாக்யூஸ் டி பைவா என்றும் அழைக்கப்படுபவர்) என்ற யூதர் ஜார்ஜ் கோட்டையைப் பாதுகாக்க தன்னார்வலர் படை ஒன்றை கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்க வேண்டும் என்றும், அப்படி அமைத்தால் தன் வீரர்கள் சிலரை அதற்கென ஒதுக்கி உதவுவதாகவும் கடிதம் எழுதியிருக்கிறார். பெரும் வணிகரான பைவா, கோல்கொண்டாவிலிருந்து வைரங்கள் மற்றும் தங்கம் வாங்கி, அவற்றைக் கப்பல்கள் மூலம் ஐரோப்பாவுக்கு அனுப்பி வணிகம் செய்துவந்தார். ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து வந்த பைவா, சென்னையின் இரண்டாவது ‘சினகாக்’ (Synagogue) என்ற யூதக் கோயிலைக் கட்டியவர் என்று சொல்கிறார் தாவீது லேவி.

ஜேம்ஸ் பைவா மதராஸின் ஆளுனர் எலிஹு யேலுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். 1683ஆம் ஆண்டு கோவளம் கடற்கரைப் பகுதியில் யூத முகவர்கள் (Interloper) மூவர் மதராஸுக்குள் நுழைய அனுமதி கேட்க, கிழக்கிந்தியக் கம்பெனி அனுமதி மறுத்தது. அப்போது பைவா தலையிட்டு யேலின் அனுமதியை அவர்களுக்குப் பெற்றுத்தந்தார். அவர் உதவியால் நகருக்குள் நுழைந்த பார்தலம்யூ ரோட்ரிக்ஸ் (Bartholomew Rodrigues), டொமிங்கோ டி போர்ட்டோ (Domingo D Porto), அல்வரெஸ் ட ஃபொன்சேகா (Alvarez Da Fonseca) ஆகிய மூவரும், 1688ஆம் ஆண்டு மதராஸ் மாநகராட்சி உருவான போது அதன் முதல் ‘ஆல்டர்மென்’(Aldermen) பதவியில் அமர்ந்தார்கள். பார்தலம்யூ இரண்டு நிறுவனங்களும், ரோட்ரிக்ஸ் ஒரு நிறுவனமும் நடத்திவந்தார்கள்.

ஆளுனர் யேலுடன் இவர்களுக்கும் நல்ல நட்பு இருந்தது. துத்தநாகம், சந்தனம், செம்பு, வைரங்கள், நகைகள் என்று இவர்கள் செய்யாத ஏற்றுமதியே இல்லை எனலாம். 1692ஆம் ஆண்டு பார்தலம்யூ இறந்தபிறகு, அவரது உடலை முத்தியால்பேட்டை பகுதியிலுள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்தார்கள். இது ‘பார்தலம்யூ கார்டன்’ எனவும், இதை ஒட்டிய பகுதி ‘ஃபோர் பிரதர்ஸ் கார்டன்’ என்றும் 1710ஆம் ஆண்டு வரையப்பட்ட பிட்ஸ் வரைபடம் (Pitts Map) காட்டுகிறது. இந்தப் பகுதி பார்தலம்யூ, பைவா, டி போர்ட்டோ, ஃபொன்சேகா என்ற நான்கு யூதர்களுக்கு உரிமையாக இருந்துள்ளது.

1726ஆம் ஆண்டின் மதராஸ் வரைபடத்தில் ரோட்ரிக்ஸ் கல்லறை, ஃபோர் பிரதர்ஸ் கார்டன், படம்: விக்கிபீடியா

யேலுக்குப் பிறகு தாமஸ் பிட் மதராஸின் ஆளுனரானார். பிட்டின் செல்லப்பெயர் ‘டயமன்ட் பிட்’. அந்தளவுக்கு வைரங்கள் மேல் பித்துப் பிடித்த பிட், ஒரு கட்டத்தில் ‘தி ரெஜன்ட்’ (The Regent) என்ற வைரத்தை கோல்கொண்டாவிலிருந்து கைப்பற்றினான். இந்த வைரத்தை ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய தக்க ஆளை சிபாரிசு செய்யுமாறு தாமஸ் பிட், அல்வாரஸ் ட ஃபொன்சேகாவுக்குக் கடிதம் எழுதினார். தன் முழு நம்பிக்கைக்குரிய ஆள் என்று ஃபொன்சேகா, ஐசக் அபெதனோ சார்தோ (Isaac Abedano Sardo) என்ற யூத வைர வணிகரை பிட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

பிட்டின் ரெஜென்ட் வைரத்தை வெட்டுவதற்கும், அதை மெறுகேற்றுவதற்கும் சார்தோ ஆலோசனை தந்தார். பின்னாளில் மாவீரன் நெப்போலியனின் வாளில் ஜொலித்த அந்த வைரத்தின் இன்றைய சந்தை விலை பல கோடி டாலர்கள்! செஃபர்தி யூதர்களுக்குப் பின், ஆங்கிலேய யூதர்கள் ஒரு அலையாக மதராஸ் வந்து சேர்ந்தார்கள். ஆபிரகாம் சாலமன்ஸ், ஹென்றி சாலமன்ஸ், லேவி மோசஸ், எஃப்ரஹிம் ஐசக், சாமுவேல் மோசஸ், சாமுவேல் டி காஸ்ட்ரோ, சாலமன் ஃபிரான்கோ என்று பல யூதர்கள், 18ஆம் நூற்றாண்டில் இங்கு வந்து குடியேறினார்கள்.

காணாமல் போன கல்லறைகள்

இவர்களில் ஐசக் சார்தோ மற்றும் சாலமன் ஃபிரான்கோ போன்றவர்களின் கல்லறைக் கல்வெட்டுகள் இன்றும் பத்திரமாக உள்ளன. “சென்னையின் முதல் யூதக்கோயில் மற்றும் அதை ஒட்டிய கல்லறை, ஆம்ஸ்டர்டாம் நகரின் செஃபர்தி யூதர்களால் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பவளக்காரத் தெருவில் கட்டப்பட்டது. பின்னர் பெத்தநாயக்கன்பேட்டை பகுதிக்கு இரண்டும் இடம் பெயர்ந்தன. அந்தப் பகுதி தான் பின்னர் மின்ட் தெருவின் தெற்குப் பகுதியாக மாறியது”, என்று சொல்கிறார் தாவீது. “1644ஆம் ஆண்டு பைவாவால் கட்டப்பட்ட இந்த இரண்டாவது கோயிலின் ஒரு பகுதி, 1934ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. கல்லறையோ, அரசால் ‘சென்ட்ரல் பூங்கா’ பகுதிக்கு, “உயிரின் வீடு” (Beit Ha Haim) என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட அதன் வாயிலுடன் மாற்றப்பட்டது. எஞ்சியிருந்த கோயிலின் பகுதி 1967ஆம் ஆண்டு முழுவதுமாக இடிக்கப்பட்டது.”

“சென்ட்ரல் பூங்காவிலிருந்த கல்லறை, அரசுப்பள்ளி அமைப்பதற்காக ஜூன் 5, 1968 அன்று அரசால் தகர்க்கப்பட்டது. கல்லறைக்கற்கள் காசிமேடு பகுதியின் கிறிஸ்துவ கல்லறைக்கு எதிரே மாற்றப்பட்டன. இந்த சம்பவங்களால் உடல்நலம் குன்றியிருந்த யூதக் கோயிலின் இறுதி ராபி சாலமன் ஹலேவி, மாரடைப்பால் காலமானார். அதன் பின் எண் 15, பவளக்காரத் தெருவிலிருந்த எங்கள் வீட்டில் தான் மத சம்பந்தப்பட்ட வழிபாடுகள், கூட்டங்கள் நடந்தன. காசிமேட்டில் இருந்த கல்லறை 1983ஆம் ஆண்டு இன்று இருக்கும் லாயிட்ஸ் சாலைப் பகுதிக்கு மாற்றப்பட்டது. அப்போது ஜாக்யூஸ் பைவா உள்பட 17 பேரின் கல்லறைக் கல்வெட்டுகள் காணாமல் போயின”, என்று தாவீது விளக்குகிறார்.

சென்னை லாய்ட்ஸ் சாலையிலுள்ள யூதக் கல்லறை

யூதக் கல்லறையில் எஞ்சியிருக்கும் கல்வெட்டுகள்

“எங்கள் குடும்ப அமைப்பு பெண்களுக்கு பெரும் மதிப்பைத் தந்திருந்தது. ரெபெக்கா கோஹன் 1940களிலேயே ஓட்டுநர் உரிமம் பெற்று மதராஸின் தெருக்களில் கார் ஓட்டியவர். எங்கள் குடும்பங்களில் வணிகத்தை ஆண்கள் கவனித்துக் கொண்டாலும், அவர்களது துணையின்றி, பெண்களும் அவர்களுக்கு சமமாக நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டதுண்டு.”

“இங்கிருந்த யூதக் குடும்பங்களில் மிக முக்கியமானது என் கொள்ளுத் தாத்தாவான ஐசக் ஹென்ரிக்யூஸ் டி காஸ்ட்ரோவின் குடும்பம். ஆம்ஸ்டர்டாமிலிருந்து வந்தவரான ஐசக், ஆபிரகாம் மற்றும் ஃப்ளோராவின் மகளான ரோசாவைத் திருமணம் செய்துகொண்டார். ஹெச்.டிசி. டிரான்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனத்தை இந்தக் குடும்பம் நிர்வகித்து வந்தது. இது தவிரவும் பல வணிகங்களில் இந்தக் குடும்பம் ஈடுபட்டிருந்தது. ஜெர்மனியின் யூதப் படுகொலையில் சிக்கி ஐசக் மற்றும் ரோசா இறந்து போனாலும், அப்போது 23 வயதான என் தாத்தா லேவி ஹென்ரிக்யூஸ் அங்கிருந்து தப்பி மதராஸ் வந்துசேர்ந்தார். இங்கு வணிகம் செய்து பொருளீட்டியவர், இஸ்ரேல் திரும்பினார். ஆனால் அங்கு வாழப் பிடிக்காதவர், மீண்டும் இந்தியாவுக்கே வந்துவிட்டார். மதராஸில் இருந்த அவரது ஒரே உறவினரான யூதக் கோயிலின் இறுதி ராபி சாலமன் ஹலேவி, ரெபெக்கா கோஹனின் மகளான ரக்கேலை அவர் மணந்து கொண்டார்.”

யூதக் கோயிலின் இறுதி ராபி சாலமன் ஹலேவி மற்றும் அவர் மனைவி ரெபெக்கா கோஹன்; படம்: விக்கிபீடியா

ஒரே யூதர்

“இஸ்ரேலின் போருக்கு தன் சொத்து முழுக்க விற்றுப் பணம் தந்து செல்வத்தை இழந்த என் தாத்தா லேவி, 1978ஆம் ஆண்டு இறந்துபோனார். கேரளா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவர் மனைவி ரக்கேல், 1982ஆம் ஆண்டு இறந்துபோனார். அவர்கள் மகளான சாரா தான் என் அம்மா. நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த தாத்தாவின் நிறுவனங்களை லாபகரமாக மாற்றியது என் அம்மாவின் சாதனை. சிறு வயதில் எங்களை வளர்த்தெடுக்க, காய்கறி கூட அம்மா விற்றதுண்டு”, என்று சொல்கிறார் தாவீது. சாராவுக்கும், ஏமன் நாட்டு யூதரான சன்னன் லேவிக்கும் பிறந்த மகன் நான். ஏமனிலிருந்து இங்கு வந்த யூதர்கள் பெரும்பாலும் நஜ்ரன் பகுதியைச் சேர்ந்தவர்கள்”, என்று சொல்கிறார் தாவீது. இன்று சென்னையில் வாழும் ஒரே யூதரான இவர், சரக்குக் கப்பல் நிறுவனம் ஒன்றில் காப்டனாகப் பணியாற்றுகிறார்.

“மயிலாப்பூர் காட்டுக்கோயில் எங்கள் குடும்பத்துக்கு உகந்த ஆலயமாக இன்றும் உள்ளது. வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள கென்னடி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தான் பயின்றேன், உங்களில் ஒருவராகத் தான் வாழ்கிறேன். ‘பெசாக்’ (PassOver) திருவிழாவை எப்படியும் கொண்டாடிவிடுவோம். எங்கள் வீட்டிலேயே மதச் சடங்கை நடத்துவோம். சில சமயம் இஸ்ரேல் அல்லது பிற நாடுகளிலிருந்து யூதர்கள் எங்கள் வீட்டுக்கு பெசாக் கொண்டாட வருவதுண்டு. மட்சா என்ற யூதர்களின் சிறப்பு ரொட்டியை நாங்கள் ஒன்றாக சுவைப்பதுண்டு”, என்று சொல்கிறார்.

வழிபாட்டுக்கென கோயில் இல்லாத காரணத்தால், வீட்டுக்குள்ளேயே வழிபடுவதாகச் சொல்பவர், கோயிலில் சென்று வழிபடவேண்டும் என்றால் கொச்சிக்குத் தான் செல்லவேண்டும்; ஆனால் அங்குள்ள யூதர்கள் தன்னை பெரிதாக மதிப்பதில்லை என்று சொல்கிறார். லாயிட்ஸ் சாலையிலுள்ள யூதக் கல்லறையை இன்றும் தாவீது லேவியின் ஹென்ரிக்யூஸ் குடும்பத்துக்குச் சொந்தமான “ஐசக்- ரோசா சாரிடபிள் டிரஸ்ட்” பாதுகாத்து வருகிறது.

அண்ணா அனுப்பிய இரங்கல் செய்தி

2012ஆம் ஆண்டு தமிழகத்தைத் தாக்கிய நீலம் புயலால், கல்லறைச் சுற்றுச்சுவர் உடைந்து போக, அதை தாவீதின் குடும்பத்தினர் 2016ஆம் ஆண்டு சீர் செய்திருக்கிறார்கள். இந்தக் கல்லறையிலுள்ள கல்வெட்டு ஒன்று நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது. தாவீதின் கொள்ளுத் தாத்தா ஐசக் மற்றும் ரோசா இருவரும் ஜெர்மனியின் யூதப்படுகொலையில் கொல்லப்பட்ட போது அறிஞர் அண்ணா அனுப்பிய இரங்கல் செய்தி இங்குள்ள சுற்றுச்சுவரில், கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது.

யூதக்கல்லறையிலுள்ள அண்ணாதுரை கல்வெட்டு

“ஐசக் அண்ணா, எப்போதுமே எங்களுக்கு உதவி நல்கிட ஆயத்தம் கொண்டவராயும், எங்களுள் ஒருவராய் மதிக்கப்படுபவராயும் இருந்தவர். ரோசா அண்ணி தமிழ் மக்களின்பால் அவரது பெற்றோர் கொண்டிருந்த அன்பைப் பறைசாற்றும் விதமாய், தமிழ்ப் பெயர் சூட்டப்பெற்றவர். இவர்கள் ஒருபோதும் மறக்கப்பட மாட்டார்கள்- கா.ந.அண்ணாதுரை”.

பெரியாருக்கு எதிரான தீர்மானம்

நம்பர் 15, பவளக்காரத் தெருவில் ஐசக் குடும்பம் வெகுகாலம் குடியிருந்தது. அதே பவளக்காரத் தெருவிலுள்ள 7ஆம் எண் வீட்டில் தான், 19 செப்டம்பர், 1949 அன்று காலை அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் பெரியாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் இயற்றினர். அதன் விளைவாக திராவிடர் கழகம் உடைந்து, திராவிட முன்னேற்ற கழகம் தோன்றியது.

திருவொற்றியூர் முனிசிபாலிட்டியின் தலைவராக இருந்த சண்முகம் பிள்ளையின் வீடு அது.

**“நாங்கள் அமைதியை அதிகம் விரும்புபவர்கள். இஸ்ரேலுக்கு அவ்வப்போது சென்று வந்தாலும், அங்குள்ள வன்முறையும் வாழ்க்கை முறையும் எனக்குப் பிடிப்பதில்லை. என் தாய் வீடு தமிழகம் தான். தமிழனாகவே நான் உணர்கிறேன்.** நாங்கள் தமிழ் மக்களுடன் நல்ல உறவு பாராட்டி வாழ ஆசைப்படுபவர்கள். ஆனால் யூதர் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கோ நடக்கும் தேவையற்ற சர்ச்சைகளின் போதெல்லாம் இஸ்லாமியர் எங்களைத் தாக்குவதுண்டு. இதனால் நாசரேத்திலிருந்து வந்தவர்களின் வம்சாவழியினரான என் மனைவி, இந்துப் பெயருடன் வலம் வருகிறாள். என் மகள்களுக்கும் எங்கள் மத, இன அடையாளமற்றப் பெயரையே வைத்திருக்கிறேன். எங்களுக்கு அமைதி மட்டும் போதும்”, என்று சொல்லி முடிக்கிறார் தாவீது லேவி.

அமைதி நிலைபெறட்டும்

யூதர்களின் நினைவைச் சுமந்தபடி இந்த நகரின் புளியந்தோப்பு பகுதியிலுள்ள டி- காஸ்டர் (தாவீதின் டி காஸ்ட்ரோ குடும்பப் பெயர்) தெருவும், பீட்ரோ பெரெய்ரா என்ற யூதரின் பெயரில் பார்க் டவுன் பகுதியில் பெரெய்ரா தெருவும் இருக்கின்றன. ஒரு கல்லறையும், அதிலுள்ள சில கல்வெட்டுகளும், இரண்டு தெருப் பெயர்களும் தவிர இன்று யூதர்கள் வாழ்ந்தத் தடயங்கள் எதுவும் நகரில் இல்லை.

தமிழகம் தன்னை நம்பி வந்தாரை வாழ வைக்கும் என்பதில் நமக்கு எள்ளளவும் ஐயமில்லை. நூற்றாண்டுகளாக சொந்த நிலமற்று, மாறி மாறிப் புலம் பெயர்ந்து வந்த யூதர்களின் நிலை இப்போது பெரிதும் மாறியுள்ளது. தன் மூதாதையர் போல, தாவீது தான் விரும்பும் அமைதியைப் பெற்று தமிழகத்தில் வாழட்டும்.

**பேட்டி மற்றும் படங்கள்: தாவீது லேவி, நிவேதிதா லூயிஸ்**

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ்

சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share