ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் பண்டிகைகள், திருமணம் அல்லது வீட்டுக் கடன் தவணைகள் போன்ற செலவுகளுக்காக தங்கள் SIP திட்டங்களை நிறுத்துகின்றனர். ரூ.20,000 SIP-ஐ சில மாதங்கள் நிறுத்துவது, ரூ.40,000 அல்லது ரூ.60,000 சேமிப்பதாகத் தோன்றினாலும், நீண்ட காலத்திற்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தும். கூட்டு வட்டியின் (compounding) சக்தி காரணமாக, இன்று நிறுத்தும் ஒரு சிறிய தொகையானது எதிர்காலத்தில் ரூ.50 லட்சம், ரூ.1 கோடி அல்லது அதற்கும் மேலான இழப்பை ஏற்படுத்தலாம்.
பெரும்பாலான மக்களுக்கு இதுபற்றிய சரியான விழிப்புணர்வும் புரிதலும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு மாதமும் நீங்கள் முதலீடு செய்யும் SIP ஒரு புதிய முதலீடாகும். ஒரு மாத தவணையைத் தவறவிட்டால் அந்தப் பணம் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு வளர வாய்ப்பை இழக்கிறது. உதாரணமாக, நீங்கள் 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.20,000 SIP செய்து, ஆண்டுக்கு 12% வட்டி பெற்றால், சுமார் ரூ.7 கோடி சேமிக்கலாம். ஆனால், வருடத்திற்கு மூன்று மாதங்கள் SIP-ஐ நிறுத்தினால், இறுதித் தொகை சுமார் ரூ.5 கோடியாகக் குறையலாம். இது சுமார் ரூ.1.52 கோடி இழப்புக்குச் சமம்.
இந்த விஷயத்தில் பலர் நிறுத்திய பின்னர் அதிக முதலீடு செய்து இழப்பை ஈடுசெய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இழந்த நேரத்தை ஈடுசெய்வது கடினம். எவ்வளவு சீக்கிரமாகவும், தொடர்ச்சியாகவும் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும். திருமணங்கள், பண்டிகைகள் உங்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம். உங்களுடைய செலவுகள் அதிகரிக்கலாம். ஆனால் ஒரு மாத SIP-ஐ நிறுத்துவது எளிதாகத் தோன்றினாலும், இந்த பழக்கம் நீண்ட காலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். வருடத்திற்கு ஒரு SIP-ஐ தவறவிட்டாலும், உங்கள் சேமிப்பு 20 முதல் 30% வரையில் குறையும்.
SIP-ல் முதலீடு செய்யாமல் இருப்பது வருமானத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், பணவீக்கத்தின் தாக்கத்தையும் அதிகரிக்கிறது. இன்று நீங்கள் முதலீடு செய்யாத ரூ.20,000, எதிர்காலத்தில் உங்கள் வாங்கும் சக்தியையும் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்காக நீங்கள் பண்டிகைகள், திருமணங்கள் அல்லது EMI-களைத் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரன் SIP-களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பெரிய செலவுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும். உங்கள் SIP-களை தானியங்கிப் பணம் செலுத்தும் முறைக்கு (auto-debit) அமைக்கவும். அவசர கால நிதியை (emergency fund) உருவாக்க வேண்டும்.
அப்படியும் சிரமமாக இருந்தால் SIP தொகையைச் சற்று குறைத்துக் கொள்ளலாம். ஆனால் அதை முழுமையாக நிறுத்தினால் இழப்பு உங்களுக்கே என்கின்றனர் நிபுணர்கள்.
