உங்கள் மலத்தின் நிறமே உங்களுக்கு உள்ள உடல்நலப் பிரச்சனையை சொல்லிவிடும். வாருங்கள் அவை என்னவென்று பார்க்கலாம்.
நாம் சாப்பிட்ட உணவுகள் சத்துக்களாக உறிஞ்சப்பட்டது போக மீதமுள்ளவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. வழக்கமாக நமக்கு என்ன உடல்நலப் பாதிப்புகள் இருக்கிறது என்பதை நாம் உணர முடியாமல் இருக்கலாம். மலத்தின் நிறம் உங்களின் ஆரோக்கியம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்தக்கூடும். பழுப்பு நிறத்தில் மலம் வெளியேறினால் செரிமான மண்டலம் நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம். மலத்தின் நிறமும் அது வெளிப்படுத்தும் ஆரோக்கிய நிலையையும் பின்வருமாரு பார்க்கலாம்.
பச்சை நிறம்
இந்த வகை மலத்தின் நிறம் பார்ப்பதற்கு பயமாக இருக்கலாம், ஆனால் அவை இயல்பானவை. கீரை போன்ற குளோரோபில் நிறைந்த உணவுகள், கருப்பு அல்லது நீல பெர்ரி போன்ற அந்தோசயினின்களால் பச்சை நிறமாக மலம் வெளியேறுகிறது.
அடர் மஞ்சள்
மலத்தில் பித்தம் அதிகரிப்பதால் அடர் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. கீட்டோ டயட் அல்லது மஞ்சள் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வதால் ஏற்படலாம். பொதுவாக இதனால் கவலைப்பட வேண்டியது இல்லை. ஆனால், நீங்கள் பலவீனமாக உணர்ந்தாலோ அல்லது வயிற்றுப்போக்கு இருந்தாலோ, மருத்துவரை அணுகுவது நல்லது.
வெள்ளை
ரத்த சிவப்பணுக்களின் முறிவால் உருவாகும் மஞ்சள் நிறமியான பில்ரூபின் இல்லாவிட்டால், மலத்தின் நிறம் உண்மையில் வெண்மையாக இருக்கும். பில்ருபீன் இல்லாதது பித்தநீர் குடலை அடையவில்லை என்றும், எங்காவது உள் அடைப்பு இருப்பதாகவும் அர்த்தத்தை குறிக்கிறது. இது ஒரு மருத்துவ அவசரநிலை. இதற்கு அவசர சிகிச்சை தேவைப்படலாம்.
சிவப்பு
மலம் சிவப்பு நிறமாக இருப்பது அல்லது ரத்தப்போக்குக்கு மூல நோய் காரணமாக இருக்கலாம். மேலும் பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். மலத்தில் ரத்தப்போக்குடன் உங்களுக்கு தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை சந்திப்பது மிகவும் முக்கியம்
கருப்பு
அஜீரணத்திற்கு இரும்பு சத்து மாத்திரை அல்லது பெப்டோ பிஸ்மால் மருந்தை எடுத்துக்கொள்வது, கருப்பு மலத்தை ஏற்படுத்தும். ஒட்டும் அல்லது தார் போன்ற கருப்பு மலம் இருந்தால் அது ரத்தமாக இருக்கலாம். மேல் பகுதியில் இருந்து ரத்தம் வரும்போது, உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்த பிறகு அது கருப்பு நிறமாக மாறுகிறது. இது ஒரு மருத்துவ அவசரநிலை மற்றும் விரைவாக கவனம் தேவை என்று அர்த்தம்.
மலம் திரவமாக இருந்தால்
மலம் திரவமாக வந்தால் உங்களுக்கு வயிற்றுப் போக்கு உள்ளது என்று அர்த்தம். உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருக்கலாம்.
ஊதா
ஊதா நிறங்கள் பொதுவாக 1 அந்தோசயனின்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்படுகின்றன. இவை பெர்ரி அல்லது சிவப்பு ஒயினில் உள்ளன. ஊதா நிறத்தில் மலம் வந்தால் பயப்படத் தேவையில்லை, சாதாரணமானதுதான்.
மலத்தின் நிறம் ஏன் முக்கியமானது?
மலம் என்பது உங்கள் செரிமான அமைப்பின் ஒரு தயாரிப்பு. பழுப்பு அல்லது வெளிர் மஞ்சள் நிற மலம் என்பது ஆரோக்கியமான செரிமான அமைப்பின் அறிகுறியாகும், இது சாதாரணமாக செயல்படுகிறது. இருப்பினும், மற்ற நிறங்களுடன் மலம் வருவது சற்று கவனிக்கப்படவேண்டியது. ஆகவே, சாதாரணமாக விட்டுவிடாமல் அதற்கு கவனம் கொடுங்கள்.
