திண்டிவனத்தில் உள்ள தினமலர் அலுவலகத்தில் இன்று (ஏப்ரல் 15) பாமகவினர் கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். stone attack on dinamalar office
வரும் மே 11 ம் தேதி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சியின் தலைவரான அன்புமணி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே யார் தலைவர் என்பதில் ராமதாஸ் – அன்புமணிக்கு மோதல் ஏற்பட்டது. அன்புமணியிடமிருந்த மாநில தலைவர் பதவியை பறித்து, அவரை செயல்தலைவராக நியமித்து, ’இனி நானே தலைவர்‘ என்று அறிவித்தார் ராமதாஸ்.
எனினும் அடுத்த இரண்டு நாளில் ‘நானே தலைவர்’ என்று ராமதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டார் அன்புமணி.

இருவருக்கும் இடையேயான மோதலுக்கு, ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான் காரணம் என அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேச்சு எழுந்தது.
இந்த நிலையில், மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடம்பெறும் சுவர் விளம்பரங்களில் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு அடுத்து முகுந்தன் பெயர் அதிக அளவில் இடம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் சில இடங்களில் அன்புமணியின் பெயர் இடம்பெறாமல், ராமதாஸ், காடுவெட்டி குருவிற்கு அடுத்ததாக முகுந்தன் மாநாட்டிற்கு அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தினமலர் பத்திரிகையில் இன்று, முகுந்தனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக செய்தி வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த விழுப்புரம் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயராஜ் தலைமையில் சுமார் 25 பேர் திண்டிவனம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள தினமலர் அலுவலகத்தை இன்று மாலை 5.30 மணியளவில் முற்றுகையிட்டனர்.
மேலும் அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகள் இரண்டினை கற்களால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, தினமலர் விளம்பர பலகையை கீழே தள்ளினர்.
பின்னர் இன்றைய தினமலர் நாளிதழை கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.