ச.மோகன்
நீதி பெருமையுற வழங்கப்பெற்ற தீர்ப்புகளின் பட்டியலில் புதிதாக ஒரு நியாயத் தீர்ப்பு. கடந்த கால் நூற்றாண்டுக் காலமாகத் தூத்துக்குடி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை, ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடிய தமிழக அரசின் ஆணை செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிகுத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்தக் கொள்கை முடிவுக்கு இந்தத் தீர்ப்பு வலுசேர்ப்பதாக உள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் இறுதித் தீர்ப்புக்கு அடித்தளமிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.
இந்தத் தீர்ப்பால் தூத்துக்குடி பகுதியின் நில வளம், நீர் வளம், கடல் வளம் ஆகியவை மாசுபடாமல் பாதுகாக்கப் பெறுவதால் தூத்துக்குடி மக்களுக்கு இந்தத் தீர்ப்பு ஓர் ஆறுதலாய் அமைந்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்குப் பெருத்த அதிர்ச்சி அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளைத் தன் உள்ளங்கையில் வைத்து அரசியல் பரமபதம் ஆடும் வேதாந்தா குழுமம் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
தீர்ப்பின் பின்னணியில்…
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு நீதிமன்றம் தொடர்ந்து 43 நாட்கள் விசாரணை செய்து 815 பக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நியாயத்தின் வெற்றிக் குறியீடாய் அமைந்துள்ள இந்தத் தீர்ப்பின் பின்னணியில் திரைமறைவாய் ஏதுமில்லை. எல்லாமே வெளிப்படையாக உள்ளன. அவற்றுள் சில…
* ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வாதிட்ட வழக்குரைஞர்கள் ஆயிரம் பக்கங்கள் கொண்ட தரவுகளையும், அவற்றை அடிப்படையாகக்கொண்ட எழுத்துபூர்வமான விவாதத்தையும் அளித்துள்ளனர்.
* ஸ்டெர்லைட் ஆலை பயன்பாட்டுக்கு வந்த 1996ஆம் ஆண்டிலிருந்து தூத்துக்குடி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பருவமழைப் பொய்த்தது. அவை மழை மறைவுப் பகுதியாக மாறிப்போயின. ஆனால் 2018 மே 28இல் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டபின் தூத்துக்குடி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பருவமழைத் தவறாது பெய்தது என்பதற்கு இயற்கையே சாட்சி பகர்கிறது.
* இதுவரை அப்பகுதி மக்கள் அறியாத புதுப்புது நோய்கள் மக்களைத் தாக்கியதும் கண்கூடு. சரும நோய், கண் நோய், நுரையீரல் நோய், கருச்சிதைவு, குழந்தையின்மை, சிறுநீரக நோய், இதய நோய், புற்றுநோய் போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கன.
* பிறக்கும் குழந்தைகள்கூட மேற்கூறப்பட்ட நோய்களுக்குத் தப்பவில்லை. வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
* ஆண்டாண்டுக் காலமாய் மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாயின.
* கிராமங்களில் நடு இரவில் சிறுநீர் கழிக்க வீட்டை விட்டு வெளியே வருவோர், அதிகாலையில் வேலைக்குச் செல்வோர் மூச்சுத் திணறலால் பாதிப்புற்றது ஊரறிந்ததே.
* மனிதர்கள் மட்டுமல்லர்; கால்நடைகளும் நோயுற்றுப் பாதிப்புற்றன.
* மனிதர்களும், கால்நடைகளும் மட்டுமல்ல… புல் பூண்டுகளும், விவசாயப் பயிர்களும் நோயுற்றுப் போயின. விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளானது.
* மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாகத் தூத்துக்குடி மாறிக்கொண்டிருக்கிறது என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
* இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் தாமிர உற்பத்தியின்போது வெளியேறும் கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சுப் புகையாகும். ஒரு டன் தாமிர உற்பத்தியின்போது இரண்டு கிலோ கந்தக-டை-ஆக்சைடு வெளியேறுகிறது.
* ஆலையின் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள நீர்நிலைகளிலும், கடலிலும் கலப்பதால் கடல் வளமும், நிலத்தடி நீர் வளமும் பாதிக்கப்பட்டுள்ளன.
**விதிமுறை மீறல்கள்**
மேற்கூறப்பட்டவை யாவும் ஸ்டெர்லைட் ஆலையின் விதி மீறலால் விளைந்தவை. ஒரு நாளைக்கு 1200 டன் தாமிரத்தை உற்பத்தி செய்து அதன் மூலம் 2400 டன் கழிவுகளை நாளொன்றுக்கு வெளியேற்றியது. ஆண்டொன்றுக்கு எட்டு லட்சம் டன் கழிவுகளை வெளியேற்றியது. இதன் தாக்கத்திலிருந்து இயற்கையைப் பாதுகாக்கப் பசுமைப் போர்வையை ஸ்டெர்லைட் அமைக்கவில்லை என்று நீரி அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் இந்த ஆலையை இங்கு அமைத்திருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு தொழிற்சாலை நிறுவும்போது அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது.
மேலும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி பெறாமல் நீதிமன்றம், பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளின் அடிப்படையில் 16 ஆண்டுகள் 92 நாட்கள் ஸ்டெர்லைட் இயங்கியிருப்பது வெளிப்படை. குறிப்பாக 1998ஆம் ஆண்டிலிருந்து 2012 வரை பல்வேறு குழுக்கள் அளித்த பரிந்துரை எதையும் ஸ்டெர்லைட் கண்டுகொள்ளாமல் செயல்படுத்தவில்லை என்பது நீதிமன்றத்தில் வெட்ட வெளிச்சமானது. ஸ்டெர்லைட் ஆலை அரசு விதிகளை மீறி கால் நூற்றாண்டுக் காலமாகத் தூத்துக்குடி பகுதியை மாசுபடுத்தியுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தாமிர உற்பத்தியில் தற்சார்பின்மை
ஸ்டெர்லைட் ஆலை மூலம் இந்தியா தாமிர உற்பத்தியில் தற்சார்புடையதாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியா வெளிநாடுகளில் இருந்து தாமிரத்தை இறக்குமதி செய்ய வேண்டி வரும், அது இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இயற்கையைப் பெருமளவில் மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பொருளாதார உயர்வைவிட நாட்டின் சுற்றுச்சூழலையும், மக்களையும் பாதுகாப்பதே முக்கியத்துவம் வாய்ந்தது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நேரிடையாக 4,000 பேரும், மறைமுகமாக 20,000 பேரும் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்று ஸ்டெர்லைட் தரப்பில் கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடியபின் இவர்கள் மாற்று வேலைத் தேடிச் சென்றனர். இவர்களுள் பெரும்பாலோர் ஒப்பந்தத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆவர். பலர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தோர் ஆவர். உயர்பதவியில் வெளிமாநிலத்தவரே ஆதிக்கம் செலுத்தினர். உள்ளூர்க்காரர்கள் மிகச் சொற்பமானவர்களே ஆவர். அன்று முதல் இன்று வரை தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு இல்லை என்ற பிரச்சினை இருந்தது இல்லை.
பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதைத் தொடர்ந்து மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காகத் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியை ஸ்டெர்லைட் செலவிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்புப் பணியின்போது அமிலக் குழாயில் பழுது ஏற்பட்டு ஜெய்சங்கர் (அத்திமரப்பட்டி) என்ற இளைஞர் முகம், முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு முழுமையாக சிகிச்சை அளிக்காமல் பாதியிலேயே அவரை விரட்டிவிட்டு, இன்று வரை இழப்பீடு வழங்காமல் இருக்கும் நிர்வாகத்தின் கல் நெஞ்சத்தையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இன்று வரை அவரது உடல்நிலை, வேலை செய்யும் தகுதியை அடையவில்லை. வயதான பெற்றோரின் உழைப்பில் இந்த இளைஞர் தன் எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வருகிறார். உண்மையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய உதவி செய்யாமல் தேவையற்ற உதவிகளைத் தன்னலங்கருதியே ஸ்டெர்லைட் செயல்படுத்துகிறது என்பதற்கு இதுவே பொருத்தமான சாட்சி என்றால் மிகையன்று.
மக்களின் குரலை எதிரொலிக்கும் தீர்ப்பு
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் சுரங்கத் தொழில், தாமிர உற்பத்தி போன்ற தொழில்களில் கால் பதித்து வருகிறது. குஜராத், கோவா, கேரளம், கர்நாடகம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவ முயன்றபோது மக்களின் எதிர்ப்பால் வெளியேறியது. அங்கெல்லாம் மக்கள் மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் கெடுவாய்ப்பாக மக்களின் எதிர்ப்பை மீறி அரசதிகாரத்தின் ஆதரவில் ஸ்டெர்லைட் ஆலைத் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது.
கால் நூற்றாண்டுக் காலமாக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர், கொடும் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்களின் உயிரீகம் மக்களின் அறவழிப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது. உதாரணமாக உயிரீகம் செய்தோர்க்கு வீரவணக்கம் செலுத்த, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும், மக்கள் கண்காணிப்பகமும் இணைந்து கடந்த மே 22 அன்று நடத்திய இணையவழி நினைவேந்தல் நிகழ்வில் தமிழகம் முழுவதிலுமிருந்து 60,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று காலத்திலும் மக்களின் எதிர்ப்பு சற்றும் குறையவில்லை என்ற சேதி உளவுத் துறையின் மூலம் ஆட்சியாளர்களின் செவிகளைச் சென்றடைந்தது. எனவே அரசு வருகிற சட்டமன்றத் தேர்தலை கவனத்தில்கொண்டு, மக்கள் நலன் காக்கும், ஸ்டெர்லைட் ஆலையை மூடும், “கொள்கை முடிவில்” அரசு இறுதிவரை உறுதியாக இருந்தது பாராட்டுக்குரியது. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற மக்கள் மன்றத்தின் குரலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பாக்கியுள்ளது.
இதே நீதிமன்ற அமர்வு சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை வழக்கில் சுற்றுச்சூழல் பிரச்சினையை கவனத்தில்கொண்டு கடந்த 2019 ஏப்ரல் 8 அன்று விவசாயிகளுக்கான நியாயத் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை வரைவு – 2020 மீது நாடு தழுவிய எதிர்ப்பு கனன்று கொண்டிருக்கும் நேரத்தில், இந்தத் தீர்ப்பு வெளியாகியிருப்பது மனித உரிமைக் காப்பாளர்களுக்கு, சுற்றுச்சூழல் காப்பாளர்களுக்கு, விவசாயப் பெருங்குடியினருக்குப் புத்துணர்வை அளிக்கிறது. சட்டத்தின் இருட்டறையில் பதுங்கிக் கிடக்கும் பெருநிறுவன முதலாளிகளுக்கும், அவர்களின் கைப்பாவையாகத் திகழும் ஆட்சியாளர்களுக்கும் இந்தத் தீர்ப்பு புது வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. இத்தகைய தீர்ப்புகளே குடிமைச்சமூகம் சட்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இறுக்கமடையச் செய்கிறது.
கட்டுரையாளர் குறிப்பு : மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய ச.மோகன், தற்போது மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் இணை இயக்குநராக இருக்கிறார். பல்வேறு சமூகப் பிரச்சினைகளை நேரடியாக அணுகி பாதிக்கப்பட்டவர்களுடன் பேசி உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறார்.