மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து இன்று (ஜனவரி 23) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாத இறுதியில் வெளிநாடு செல்ல இருக்கிறார். தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் என அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 23) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடர், முதல் கூட்டத்துக்கு ஆளுநரை அழைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வருகின்றன.
அதுபோன்று மாநில மகளிர் கொள்கைக்குத் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2021 டிசம்பர் மாதம் மாநில மகளிர் வரைவு கொள்கை தமிழக அரசால் வெளியிடப்பட்டது.
‘பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்களுக்கான கட்டாய தற்காப்புக் கலைப் பயிற்சி. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளில் 33.3% பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மகளிர் வரைவு கொள்கையில் இடம்பெற்றுள்ளன. இதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இன்று நடைபெற்ற கூட்டம் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தோம். முதலமைச்சர் தனது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் இக்கூட்டத்தின் வாயிலாக வழங்கினார்” என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா