மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காததால் உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு. இந்த வழக்கில், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்- ஜனாதிபதிக்கு காலக்கெடுவை நிர்ணயித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீது 14 கேள்விகளை எழுப்பி பதில் கேட்டிருந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் இந்த கேள்விகள் மீது தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின் 4-வது நாளான நேற்று உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம்:
- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் விசாரணை வரம்பு என்ன? நீதிமன்ற விசாரணை சட்டப்படியானதா? இதைத்தான் ஜனாதிபதி கேள்வி கேட்டுள்ளார்
- ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்தால் அதை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? அப்படி வழக்கு தொடர முடியாது எனில் மசோதாக்கள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது.
- மசோதாக்கள் மீது 3 மாதங்களில் முடிவெடுக்காவிட்டால் ஜனாதிபதியிடம் நீதிமன்றம் காரணத்தைக் கேட்க அதிகாரமே இல்லை.
- ஜனாதிபதி முடிவெடுக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடலாம் என்கிற தீர்ப்பு சட்டத்துக்கு எதிரானது; முரணானது.
- மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் வழக்கு தொடரவும் முடியாது.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்துக்கு தலைமை நீதிபதி கவாய் தந்த பதில்:
- ஆளுநர் ஒப்புதலே வழங்கி இருந்தாலும் சட்ட சிக்கல்கள் இருந்தால் விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இருக்கிறது
- பிரச்சனை என்பது, ஒரு மசோதாவை ஆளுநர் எத்தனை காலம் நிலுவையில் வைத்திருக்க முடியும்? அப்படி கிடப்பில் போட்டால் நீதிமன்றத்தை நாட முடியுமா? இல்லையா? என்பது மட்டும்தான்.
- மாநில சட்டமன்றங்களின் மசோதாக்கள் மீது பல மாதங்களாக ஆளுநர்கள் முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்தவே முடியாது
மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பு வாதம்:
- மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குதல் என்பது ஆளுநரின் அதிகாரம் தொடர்புடையது; அதில் யாரும் தலையிட முடியாது.
- மாநில அரசின் மசோதாக்களை நிராகரிக்க ஜனாதிபதி, ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.
தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முன்வைத்த வாதம்:
- ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்புரிமை என்பது இல்லை; அத்தகைய அதிகாரம் குழப்பத்தை விளைவிக்கும்
- அரசியல் சாசனத்தின் 163-வது பிரிவு, மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக செயல்படும் விருப்புரிமையை ஆளுநருக்கு தரவில்லை; மாறாக மாநில அமைச்சரவையுடன் உதவி, ஆலோசனையின் பெயரில் ஆளுநர் செயல்பட வேண்டும் என்கிறது.
- அமைச்சரவையை மீறி ஆளுநர் செயல்பட முடியாது.
- மாநிலத்தின் சட்டப்பேரவை நிர்வாக அமைப்பில் ஆளுநர் இடம் பெற்றிருந்தாலும் ஆளுநருக்கு தனித்த அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை.
- ஆளுநர், முதல்வர் என இரண்டு வாள்கள் ஒரே உறையில் இருப்பது சாத்தியமில்லை.
