ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம்: எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

Published On:

| By christopher

துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசி கொண்டுவந்த விதிமுறைகளுக்கு எதிரான தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில், பாஜக வெளிநடப்பு செய்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என பல்கலைக்கழக மானியக் குழு எனப்படும் யுஜிசி புதிய விதிகளை சமீபத்தில் வெளியிட்டது.

இதற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர், “பள்ளிக்கல்வியை சிதைப்பதற்காகவே புதிய தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்து திணிக்கிறார்கள். அரசு பொதுத்தேர்வு என்ற பெயரால் வடிகட்டி, அனைவரையும் கல்வியை தொடர முடியாத அளவுக்கு செய்ய போகிறார்கள். அதனை தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது.

யுஜிசியின் நடவடிக்கை, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. தன்னிச்சையாக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்குவது சரியல்ல. இவர்களாக ஒரு உத்தரவை போட்டுவிட்டு, இதனை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யூஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது என்பது அநியாயமல்லவா? பட்டங்களை வழங்க முடியாது என்பது பகிரங்க மிரட்டல் தானே?

தன்னாட்சி பெற்ற தனியார் கல்லூரியை பாடத்திட்டம் வகுத்து பட்டமும் வழங்கலாம் என்று கூறிவிட்டு, தங்கள் சொந்த பலத்தில் மாநில அரசு வைத்திருக்கும் நூற்றாண்டு பழமைவாய்ந்த பல்கலைக்கழகங்களை அபகரிக்க எத்தனிப்பது எதேச்சதிகாரமானது” என்று தெரிவித்து யுஜிசிக்கு எதிரான தனித்தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இதனையடுத்து தீர்மானத்திற்கு பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் தங்களது கருத்தை முன்வைத்தனர்.

மாநில அரசின் மீதான யுத்தம்!

அப்போது அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “புதிய விதிமுறை குறித்த அறிக்கையை யுஜிசி தன்னிச்சையாக வெளியிட்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. இது மாநில அரசின் மீதான மத்திய அரசின் யுத்தம். இந்த வரைவு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தன்னாட்சி பறிப்பு, மாநிலத்தின் உரிமைகள் பாதிப்பை எந்த சட்டத்தையும் அதிமுக எதிர்க்கும். அந்த வகையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை வரவேற்கிறேன்” என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

அதே போன்று, “பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வன்னியர்களில் ஒருவர் கூட துணைவேந்தர்களாக இல்லை. இதில் என்ன சமூக நீதி உள்ளது? யுஜிசி விவகாரத்தில் முதலமைச்சரின் தனி தீர்மானத்தை ஆதரிக்கிறேன்” என பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.

அதே வேளையில் முதலமைச்சரின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

பிப்ரவரி 5ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளது!

வெளியே வந்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “துணை வேந்தர் நியமனம் குறித்து யுஜிசி வரைவு விதி கொண்டு வந்துள்ளது. ஏற்கெனவே துணைவேந்தரை நியமிப்பதற்கு மூன்று உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பேராசிரியர்கள், உதவி பேராசிரியகளை நியமிக்கும் போது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அது தேவையில்லை. ஏற்கெனவே உள்ள நடைமுறையே தொடர வேண்டும் என தமிழக அரசு கூறுகிறது.

யுஜிசி விதிமுறைகள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க பிப்ரவரி 5ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது. நம் கருத்துகளை தெரிவித்து, அவர்கள் ஏற்கவில்லையென்றால் தனித்தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால் இப்போதே தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

கிறிஸ்டோபர் ஜெமா

ஆளுநர் சொன்ன ஆள்தானா? எங்கே கை வைக்கிறார்கள் புரிகிறதா? சட்டமன்றத்தில் கொந்தளித்த ஸ்டாலின்

திருந்தாத கேரளா : குப்பை கழிவுகளை தமிழகத்துக்கு கொண்டு வந்த ‘நண்பேண்டா’வுடன் தமிழர்கள் கைது!

பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share