கந்து வட்டி கொடுமை, வரதட்சிணை கொடுமை, மது போதை ஆகியவற்றுக்கு எதிராக பிரச்சாரம் செய்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏழை பெண்களை காப்பாற்றியவர் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை.
இவரது சேவையை பாராட்டி கடந்த 1999ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஸ்ரீ சக்தி புரஸ்கார் விருது வழங்கினார். அதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு சின்னப்பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
மேலும் அவருக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தனக்கு வீடு வழங்கவில்லை என 72 வயதான மூதாட்டி சின்னப்பிள்ளை கண்ணீர் மல்க சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.
இதுதொடர்பாக வெளியான வீடியோவில், ‘என்னிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஒரு சென்ட் பட்டா வழங்கிய நிலையில் தனக்கு வீடு வழங்கவில்லை. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை’ என்று வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்த மாதமே கட்டுமானப் பணி தொடங்கும்!
இதனையடுத்து, ஏற்கெனவே 1 சென்ட் இடம் உள்ள இடத்தில் மேலும் 380 சதுர அடி சேர்த்து சின்னப்பிள்ளைக்கு உடனடியாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 9) உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பத்மஸ்ரீ சின்னபிள்ளை பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தனக்கு உறுதியளிக்கப்பட்ட வீடு இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் பேசிய காணொளியைக் கண்டேன். கவலை வேண்டாம். ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனையுடன் கூடுதலாக 380 சதுர அடி நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்குப் புதிய வீடும் வழங்கப்படும். இந்த மாதமே அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை பலரும் வரவேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதல்வர்
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அரசு நிதி வழங்கி, மாநில அரசின் வழியே செயல்படுத்தப்படும் திட்டம்தான் பிரதமரின் வீடு திட்டம். பயனாளிகளைக் கண்டறிந்து மத்திய அரசின் நிதியைக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசிடம் உள்ளது என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பது வேதனைக்குரியது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மாவுக்கு வீடு கட்ட நிதியும் இடமும் வழங்காமல் அலைக்கழித்திருப்பது என்பது, திமுக அரசின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்பது கூடத் தெரியாமல் அரசியல் செய்ய கிளம்பியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அது மட்டுமல்லாது, மாவட்ட ஆட்சியரிடம் கேட்ட பின்னர் வீடு கட்ட வெறும் ஒரு சென்ட் நிலத்தை மட்டுமே தாசில்தார் வழங்கியிருக்கிறார். அது குறித்துப் பலமுறை முறையிட்ட பின்னரும், அதற்கு எந்தத் தீர்வும் காணப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அம்மா. இவை அனைத்தையும் மறைத்து விட்டு, வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டப் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்” என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மாதிரி வீடும் வரவில்லை!
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அம்மாக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் சின்னப்பிள்ளை அம்மாவுக்கு தமிழ் நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
‘மகளிர் மேம்பாடு’ எனும் கலைஞரின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்.” என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பாலியல் வழக்கு : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!
பாஜக-தெலுங்கு தேசம் கூட்டணி உறுதியானது..பரபரப்பைக் கிளப்பும் ஆந்திர அரசியல்!