அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தெரிவித்த கருத்தை வரவேற்காமல், எங்களது அரசியல் நிலைப்பாடும் தேர்தலை நோக்கித்தான் இருக்கும்; விஜயகாந்த் மறைவுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்த திமுகவுக்கு நன்றி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Stalin’s Green Signal
மதுரையில் இன்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேநேரத்தில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, அக்கட்சியின் மாநிலங்களவை வேட்பாளர்களாக இன்பதுரை, செய்யூர் தனபால் ஆகியோரை அறிவித்தார். மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருகிறது; 2026-ம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் தரப்படும் எனவும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, “தேமுதிகவைப் பொறுத்தவரை அனைத்து நிகழ்வுகளையுமே அரசியல் நிகழ்வாகத்தான் பார்க்கிறோம்.
2026-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநாட்டில் எங்களுடைய நிலைப்பாடு, கூட்டணி எல்லாவற்றையும் அறிவிப்போம். அடுத்த சில நாட்களில் 234 தொகுதிகளுக்குமான பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறோம்.
அடுத்த 6 மாதம் கட்சியின் வளர்ச்சியை நோக்கியதாக, தேர்தலை நோக்கியதாகத்தான் எங்கள் பயணம் இருக்கும்.
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். இங்கே அரசியல் என்பது தேர்தலை நோக்கித்தான் செல்கிறது. அரசியல் என்பதே தேர்தலை ஒட்டித்தான். அதுதான் எங்கள் நிலைப்பாடு” என்றார் பிரேமலதா.
பிரேமலதாவின் இன்றைய பேட்டியானது, திமுகவுக்கு பாராட்டு தெரிவித்த கையுடன், அதிமுகவின் கூட்டணி தொடரும் என்ற அறிவிப்பை ஏற்காமல் மறுப்பதாகவும் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
கடந்த சில மாதங்களாகவே, திமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மதுரை திமுக பொதுக்குழுவில், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சேர்க்க முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தாராம்.
இதனையடுத்து பிரேமலதாவை தொடர்பு கொண்டு, மதுரை பொதுக்குழுவில் கேப்டன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் சேர்க்க சொல்லி இருக்கிறார்’ என திமுக தரப்பில் இருந்து தகவல் பாஸ் செய்யப்பட்டதாம்.
இன்று திமுக பொதுக்குழுவில் அந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்தே பிரேமலதா, திமுகவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்பி சீட் கேட்டு எடப்பாடி பழனிசாமியுடனும் மற்றொரு பக்கம் திமுகவுடனும் தேமுதிக வழக்கம் போல அங்கிட்டும் இங்கிட்டுமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் வெளிப்பாடுதான் பிரேமலதாவின் இன்றைய பிரஸ் மீட்டில், எல்லா அரசியலும் தேர்தலை நோக்கித்தான்.. தேமுதிகவும் தேர்தலை நோக்கித்தான் பயணிக்கிறது என்ற கருத்து.
மேலும் அதிமுகவுக்கு பிடி கொடுக்காமல் பிரேமலதா பேசியிருப்பது என்பது திமுக கூட்டணியை நோக்கி தேமுதிக நகருகிறது என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.