டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினின் அதிரடி ‘பீகார்’ விசிட்- தூள் தூளான விஜய் ‘காங்கிரஸ்’ கனவு!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும் “கனவு காணும் வாழ்க்கை யாவும்…கலைந்து போகும் கோலங்கள்…” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

யாருடைய கனவு? யாரப்பா கலைத்துவிடுவது?

ADVERTISEMENT

சொல்றோம்யா.. பீகாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் இன்று (ஆகஸ்ட் 27) தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். பீகாரின் NH 57-ல் நடைபெற்ற ராகுல் பேரணியில் ஸ்டாலின் கலந்து கொண்டது அகில இந்திய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கூட்டம்னா ஸ்டாலினும் பங்கேற்பது வழக்கம்தானே?

ADVERTISEMENT

இது ‘இந்தியா கூட்டணி’ பொதுக் கூட்டமே இல்லை.. ராகுல் காந்தியின் யாத்திரையும் இன்றுடன் முடிவடையவும் இல்லை. ராகுல் காந்தி நடத்திய பேரணியில் ஸ்டாலினும் இணைந்து கொண்டார். ஆகஸ்ட் 30-ந் தேதி அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார். அதேபோல இந்தியா கூட்டணியின் தலைவர்கள், காங்கிரஸ் மாநில முதல்வர்கள் அடுத்தடுத்த நாட்களில் பங்கேற்கின்றனர்.

இது வழக்கத்துக்கு மாறாக இருக்கிறதே? ராகுல் காந்தி பேரணிக்கு ஸ்டாலின் இவ்வளவு முக்கியத்துவம் தர என்ன காரணம்?

ADVERTISEMENT

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டது. இப்படியான ஒரு முகாம் தமிழ்நாட்டிலும் நடக்கும்; வாக்காளர்கள் நீக்கம் மூலம் நெருக்கடி வரும்; அதனால் திமுகவினர் கவனமாக இருக்க வேண்டும் என ஏற்கனவே எச்சரித்திருந்தார் ஸ்டாலின். தேர்தல் ஆணையத்துக்கு எதிரான ராகுல் காந்தியின் யுத்தத்தில் ஸ்டாலின் இணைந்து கொண்டார்.. இது ஒரு காரணம்.. இதைத் தவிர மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

அந்த காரணத்தை விலாவாரியாக சொல்லுமய்யா.

ஆகஸ்ட் 30-ந் தேதி லண்டன், ஜெர்மன் பயணம் மேற்கொள்ளும் பிஸி ஷெட்யூலுக்கு நடுவே ஸ்டாலினின் பீகார் பயணம் தமிழக அரசியலில் ரொம்பவே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினின் இந்த மூவ் பற்றி நம்மிடம் பேசிய திமுக சீனியர்கள், “தலைவரைப் பொறுத்தவரை கூட்டணியை வலிமையாக வைத்திருக்க வேண்டும்; கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டே இருக்கனும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார்..

இந்த சூழலில்தான் தலைவர் உட்பட எங்க எல்லாருக்கும் ஒரு தகவல் திரும்ப திரும்ப வந்துகிட்டே இருக்குது.. அதாவது திமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகளை ‘எடுப்பது’- தங்களது பக்கம் இழுத்துக் கொண்டு போவது என்கிற அசைன்மெண்ட்டுகள் தவெகவின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, மற்றும் ஆதவ் அர்ஜூனாவிடம் விஜய் தந்தார். இந்த டீமும் எவ்வளவோ முயற்சித்து பார்த்தும் எங்க கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை கூட அசைத்து பார்க்க முடியலை..” என்கின்றனர்.

விஜய்யின் இந்த மூவ் பற்றி காங்கிரஸ் தலைவர்களிடம் நாம் பேசிய போது, “டெல்லி தலைமை ஒரு கூட்டணியில் உறுதியாக இருந்தாலும் ஒன்றிரண்டு ‘தலைகள்’ சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக கூட்டணிக்கு வேட்டு வைக்கிறது காங்கிரஸில் தொன்று தொட்டு வந்து கொண்டே பாரம்பரிய வியாதிதான்.

இப்ப திமுக – காங்கிரஸ் கூட்டணி ரொம்பவே வலிமையாகத்தான் இருக்குது.. ஆனால் திருநாவுக்கரசர், மாணிக்கம் தாகூர், செல்லக்குமார் போன்றவங்க ‘ஆட்டத்தைக் கலைக்கிற’ வேலையை செய்ய முயற்சிக்கிறாங்க..

அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு விஜய் 70, 80 சீட் கூட கொடுப்பார்.. ஆட்சியில பங்கு தருவார்.. 60 வருஷத்துக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸும் ஆட்சியில் அமரும் என்றெல்லாம் இஷ்டத்துக்கு ‘கதைகளை’ பரப்பி விடுறாங்க..

இப்படி பேசுகிறவர்களில் செல்லக்குமாரை ஒரு உதாரணமாக எடுத்துக்குங்க.. அவரு
திமுக கூட்டணியில் போட்டியிட்டு கிருஷ்ணகிரி தொகுதி எம்பியானவர். ஆனால் திமுக ஆட்சியையே கடுமையாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும் என சவுண்ட் விட்டவர். அதனாலேயே கிருஷ்ணகிரி சீட்டை திமுக எடுத்துக் கொண்டு செல்லக்குமாருக்கு செக் வைத்தது. அந்த கோபத்தை இப்பவும் காட்டிகிட்டு விஜய் கட்சியோட காங்கிரஸ் கூட்டணி வைக்கனும்னு பேசிகிட்டு இருக்கிறார் செல்லக்குமார்.. இப்படி ஒரு சிலரோட தனிப்பட்ட விருப்பங்கள்தான் இந்த வதந்திகளுக்கு காரணம் என விவரித்தனர்.

விஜய் கட்சியான தவெகவில் அதிருப்தியில் இருக்கும் விஜய்க்கு வேண்டப்பட்டவரிடம் நாம் பேசிய போது, “காங்கிரஸ் கட்சி எப்படியும் கூட்டணிக்கு வந்து விடும் என விஜய்யை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறாங்க.. ஆதவ் அர்ஜூனா போன்றவங்க திரும்ப திரும்ப விடாம சர்வே நடத்தி பார்க்கிறாங்க.. அதுல ஒன்றில் கூட, வெற்றி நிச்சயம்.. ஆட்சி உறுதின்னு வரலை.. அதனால காங்கிரஸுக்கு வலை வீசிப் பார்க்கிறாங்க..

இதை நம்பி ராகுல் காந்தியிடம் விஜய்யும் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்.. மதுரை மாநாட்டுல பாஜகவை விஜய் கடுமையாக அட்டாக் செய்ததும், காங்கிரஸுடன் கை கோர்க்கனும் என்கிற ‘ஆசையில்’தான்.. பாஜகவை கடுமையாகவே எதிர்க்கிறோம் என சொல்லி ராகுலை சந்தித்து விஜய்யை பேசவைக்க ரொம்பவே முயற்சிக்கிறாங்க.. ஆனால் ராகுல் காந்தி தரப்பில் ஒரு ரெஸ்பான்ஸும் இதுவரை இல்லை என்பதுதான் நிஜம்” என்கின்றனர்.

“இத்தனையையும் நன்றாக தெரிந்து வைத்த காரணத்தால்தான், திமுக கூட்டணியில் ஒரு சின்ன சிராய்ப்பு கூட வந்துடக் கூடாது; அரசியல் எதிரிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பை எந்த சூழ்நிலையிலும் தந்துவிடக் கூடாது என்பதில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கிறார் சிஎம் ஸ்டாலின். இதுக்காகத்தான் பீகாருக்கு விசிட் அடித்தார் என்கின்றன” அறிவாலய தகவல்கள்.

சரி.. காங்கிரஸ் மேலிடம், ராகுல் காந்தி தரப்பு, தமிழக கூட்டணி பற்றி என்ன நினைக்கிறாங்க? என ராகுலுடன் இருக்கும் டெல்லி நண்பர்களிடம் நாம் பேசிய போது எடுத்த எடுப்பிலேயே, “ராகுல் காந்தி தாம் பிரதமராகனும்னு விரும்புவாரா? இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கிற உங்க தமிழ்நாட்டுல 4 காங்கிரஸ் கட்சிக்காரங்க அமைச்சர் ஆகனும்னு விரும்புவாரா?

இந்த, அரசியலின் அடிப்படை அ, ஆ கூட தெரியாதவங்கதான் விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி என்றெல்லாம் பேசுவாங்க.. கிளப்பிவிடுவாங்க..

விஜய் கட்சி யாருங்க சார்? அவங்களுக்கு வாக்குகள் என ஏதாவது நிரூபணம் ஆகி இருக்கிறதா? எதுவுமே இல்லையே..

ஆனா திமுக, அது தன்னோட வலிமையை தெள்ள தெளிவாக நிரூபிச்சுகிட்டே இருக்கிற கட்சி சார்.. ஆட்சியில் இருக்கிற கட்சி..

விஜய் கூட கூட்டணிக்கு போனா 70, 80 சீட் கிடைக்கும் என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறாங்க சிலர் .. அது உண்மைதான்.. திமுகவுடன் கூட்டணி என்பது ஒரு ஸ்டேட் பிரச்சனையாக மட்டும் பார்க்கிறவங்களோட கண்ணுல கோளாறு இருக்கிறதால இப்படி பேசுவாங்க..

ராகுல் காந்தி, நேஷனல் லீடர்.. அவர் தேசிய அளவில்தான் யோசிப்பார்.. பார்லிமெண்ட்டில் திமுகவால் பாஜகவை தாம் கடுமையாக எதிர்த்து சண்டை செய்ய முடிகிறது என்பதை நல்லாவே உணர்ந்து இருக்கிறார்..

மத்தியில பாஜக கூட்டணி ஆட்சி இன்னும் 4 வருஷத்துக்கு இருக்கப் போகிறது.. இந்த 4 வருஷமும் நேஷனல் லெவலில், பார்லிமென்ட்டில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவின் வலிமை ரொம்பவே அவசியம் என்பதுதான் ராகுலின் எண்ணம்.

அதனால்தான் இந்த மாதிரி சில்லுண்டி விஷயங்களில் அவர் கவனம் செலுத்தறதே இல்லை..

கடந்த காலங்களில், 1998-ல் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு முரசொலி மாறன் ரொம்பவே முயற்சித்தார். அப்போது, டெல்லியில் சோனியா காந்தியுடன் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சிலர், “ராஜீவ் காந்தியை கொன்றவங்களை ஆதரிக்கிற கட்சி திமுக.. அவங்களோட போய் கூட்டணி வைக்கனுமா? என தூபம் போட்டனர். அதனால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமையாமல் போனது.

இதுக்கு அப்புறம்தான் கலைஞரிடம் ‘தனித்து நின்று அரசியலில் தற்கொலை செய்யவா முடியும்? தேசிய அளவில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துதான் ஆகனும்.. அதனால வேறவழியே இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது’ என முரசொலி மாறன் சொன்னார். அதை கலைஞரும் அன்று ஏற்றுக் கொண்டார்.

2004-ல் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி- கேபினட் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்த கையோடு, காங்கிரஸுடன் கூட்டணி என்ற அறிவிப்பை முதன் முதலில் வெளியிட்டவரே கலைஞர்தான். அவருக்கு பின்னர்தான் லாலு பிரசாத் யாதவும் காங்கிரஸுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். தொடக்கத்தில் ராகுல் காந்திக்கு கூட திமுக மீதான அபிமானங்கள் வேற மாதிரியாக இருந்தது.

ஆனால் இப்ப ராகுல் – ஸ்டாலின் இடையேயான உறவு வலுவாக இருக்கிறது.. தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக சமர் செய்யனும்னா திமுக என்ற பெரிய- வலிமையான சித்தாந்த அடிப்படையிலான கட்சியின் ஆதரவு தேவை என்பதில் தெளிவாகவே ராகுல் காந்தி இருக்கிறார். ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும் இடையேயான சகோதரத்துவம் ஆழமானதாகவும் இருக்கு.. கல்லை வீசிப் பார்க்க முயற்சிக்கிறவங்க வீசிப் பார்க்கலாமே தவிர.. எந்த பிரயோஜனமே இல்லை..

ராகுல் காந்தியை பார்க்க விஜய் தரப்பில் அப்பாயின்மென்ட் கேட்டு காங்கிரஸில் உள்ள சிலர் மூலமாக மூவ் செஞ்சாங்க. ஆனால் ராகுல் காந்தி இதை பொருட்டாக கூட மதிக்கலையே.. அதனால யதார்த்தம் என்ன என்பது தெரியாமலே சில காங்கிரஸ் கட்சி காரங்க பேசுறாங்க.. களம் எப்படின்னு தெரியாததால விஜய்யையும் நம்ப வைச்சுக்கிட்டே இலவு காத்த கிளியாக மாற்றி வைக்கிறாங்க” என சொல்வதாக டைப் செய்துவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share