தங்க நகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்ய கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Stalin writes to Nirmala Sitharaman
தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
இனி நகைக்கு 75 சதவிகிதம் மட்டுமே கடன் வழங்கப்படும், அந்த நகை உரிமையாளருடையதுதான் என்பதற்கு சான்றிதழ் அளிக்க வேண்டும் உள்ளிட்ட 9 வரைவு விதிமுறைகளை வகுத்துள்ளது ரிசர்வ் வங்கி.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் என பலரும் வலியுறுத்தினர்.
இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 28) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், விவசாயிகளின் 2 லட்சம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களுக்கு தங்க நகைகளை ஈடாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது.
தங்கத்தை பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் சரியான நேரத்தில், குறுகிய கால பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குவதாகவும், குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகைதாரர்கள் மற்றும் பால் பண்ணை, கோழிப்பண்ணை மற்றும் மீன்வளம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த வரைவு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிப்படையக்கூடும்.
அதனால் தமிழ்நாட்டிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் கிராமப்புற கடன் விநியோக முறைக்கு கடுமையான இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது சரிபார்க்கக்கூடிய வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் தங்கள் வீட்டுத் தங்கத்தை அடகு வைத்து வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகளால் எளிதாகக் கடன் பெறும் வழியை நேரடியாகக் குறைத்து, கடன் வாங்குபவர்கள் பெரும்பாலானோரை முறையான கடன் வழங்கும் நிதி நிறுவனங்களை நாடுவதை குறைத்துவிடும்.
நகைக்கடன் பெறும் எளிமையான வழிமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதால், கிராமப்புற கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும் மற்றும் முறையான நிதி சேர்க்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தடுக்கும்.
மேலும், கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக, சிறிய அளவிலான விவசாயக் கடன்களுக்கு கடன் பெறும் திறனை ஆவணமாக மதிப்பீடு செய்யும் முறையானது கிராமப்புறச் சூழலில் செயல்படுத்த முடியாததாக இருக்க வாய்ப்புள்ளது. இது கடன் வழங்கும் நடைமுறையில் தடைகளை உருவாக்கலாம்.
இந்த வரைவு நெறிமுறைகள் கடன்களை தவறான வகைப்படுத்தலுக்கு வழிசெய்வதுடன், தணிக்கை தடைகளுக்கும் காரணமாக அமைந்து அதன் காரணமாக வங்கி மற்றும் கடனாளி இருதரப்பினருக்கும் பொறுப்பு அதிகரிக்கக் கூடும்.
எனவே, மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தங்க பிணையத்திற்கு எதிராகக் கடன் வழங்குதல் வழிகாட்டுதல்கள் 2025-இல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வேண்டும்.
நடைமுறையில் உள்ள கிராமப்புற கடன் வழங்குதலை அங்கீகரிக்கும் விதமாக, ரூ.2 லட்சம் வரையிலான விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

கடன் கோருபவர்களின் நிதி அணுகலைப் பாதுகாக்கும் அதே வேளையில் கடன் பெறும் அளவினை மதிப்பிட ஒரு சமநிலையான ஒழுங்குமுறை மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
எனவே, விவசாய சமூகத்திற்கும் கிராமப்புற பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் ஒன்றிய நிதியமைச்சர் கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதே கருத்தை வலியுறுத்தி ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். Stalin writes to Nirmala Sitharaman