வைஃபை ஆன் செய்ததும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். கிட்டத்தட்ட அனைத்து அமைச்சர்களும் விமான நிலையத்துக்கு வந்து வழி அனுப்பி வைத்தார்கள். குறிப்பாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன், முதல்வரை வழியனுப்ப விமான நிலையத்துக்கு வருவாரா என்ற கேள்வி அறிவாலயத்திலே திமுக நிர்வாகிகள் மத்தியில் விவாதமாக எழுந்தது.
அமைச்சர் எ.வ.வேலுவின், ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு, அதற்கு துரைமுருகனின் கோபமான பதில்… அதன் பின் இருவருக்கும் முதல்வர் ஏற்படுத்தி வைத்த சமரசம் இதெல்லாம் மின்னம்பலத்தில் விரிவான செய்திகளாக வந்திருக்கின்றன.
இந்த ஒரு இறுக்கமான சூழலில் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு இருந்துவிடலாம், விமான நிலையத்துக்கு செல்ல வேண்டாம் என்றுதான் துரைமுருகன் முதலில் நினைத்திருக்கிறார்.
இந்த நிலையில்… விமான நிலையத்தில் துரைமுருகன் சகிதம் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் முதலீடுகள் ஈர்ப்பது தொடர்பான அமெரிக்க பயணம் பற்றி விளக்கினார்.
அப்போது அவரிடம் அமெரிக்கா சென்று வந்த பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. ஸ்டாலினை சுற்றி அமைச்சர்கள் புடை சூழ நின்று கொண்டிருந்த நிலையில், இந்த கேள்விக்கான பதில் சொல்லாமல் சில நொடிகள் யோசித்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அந்த இடைப்பட்ட நொடிகளில் ஸ்டாலினுக்கு அருகே இருந்த அமைச்சர்களின் உணர்வுகள் வெளிப்படையாக தெரிந்தன.
சற்று யோசித்து, ’மாறுதல் ஒன்றே மாறாதது. வெயிட் அண்ட் சீ’ என்று பதிலளித்தார் ஸ்டாலின். அதாவது அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற சஸ்பென்சை அமெரிக்கா செல்லும் முன் வைத்துவிட்டுப் புறப்பட்டார் ஸ்டாலின்.
அதேபோல ரஜினிகாந்த்- துரைமுருகன் சர்ச்சை பற்றியும் முதல்வரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தனக்கு அருகிலே நின்றிருந்த அமைச்சர் துரைமுருகனை சுட்டிக்காட்டி, ’ரஜினியும் இவரும் நீண்ட கால நண்பர்கள். இவரும் சொல்லிட்டாரு… அவரும் சொல்லிட்டாரு… நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக் கூடாது’ என்று வெளிப்படையாக சொல்லி அந்த பிரச்சினைக்கும் ஒரு டாட் வைத்தார்.
முன்னதாக… ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கும் முன்பாக பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். அந்த வகையில் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகனும் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அப்போது ரஜினி பற்றிய பேச்சும் வந்திருக்கிறது. ரஜினி பற்றி வேலூரில் தான் சொன்ன கமென்ட்டுக்கு முதல்வரிடம் வருத்தம் தெரிவித்த துரைமுருகன் அதேநேரம் தனது நிலைப்பாட்டை ஸ்டாலினிடம் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார். ‘ரஜினி பேசியது ஒரு பக்கம் வருத்தம் என்றால், நீங்கள் அதற்கு ஆமோதித்து அவருக்காக உங்கள் இருக்கையில் இருந்து எழ முயற்சித்தது எனக்கு இன்னொரு வருத்தம். அவருக்காக நீங்கள் எதற்கு எழ வேண்டும்?’ என்று ஸ்டாலினிடமே கேட்டிருக்கிறார் துரைமுருகன்.
மேலும் துரைமுருகனிடம் பேசிய அவருக்கு நெருக்கமானவர்கள், ‘ மறைந்த முன்னாள் அமைச்சரும் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவருமான பேராசிரியர் அன்பழகன் ஒரு வழக்கத்தை வைத்திருந்தார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்பதில் அவர் ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தார். அதாவது அந்த நிகழ்ச்சிகளின் அழைப்பிதழில் தனது பெயர் இடம் பெற்று இருந்தால் மட்டுமே பேராசிரியர் அன்பழகன் செல்வார். மேடையில் இடம் மற்றும் அழைப்பிதழ் இடம் இருந்தால் மட்டுமே பேராசிரியர் அன்பழகன் பொது நிகழ்வுகளுக்கு கட்சி நிகழ்வுகளுக்கு செல்வார். அப்படி ஒரு வழக்கத்தை நீங்களும் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று துரைமுருகனுக்கு நெருக்கமான சிலர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையெல்லாம் ஸ்டாலினிடம் எடுத்துரைத்த துரைமுருகன், ‘இளைஞர்களுக்கு வழி விடுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இதை எப்போதும் நான் வெளிப்படையாகவே சொல்லி வருகிறேன். ஆனால் ரஜினியை போன்ற கட்சிக்கு வெளியே இருக்கும் ஒரு நபர் நகைச்சுவை என்ற பெயரில் பேசியது என் மனதை புண்படுத்தி விட்டது. அதனால்தான் அப்படி ரியாக்ட் ஆகிவிட்டேன்’ என்று முதல்வரிடம் மனம் திறந்து சொல்லி இருக்கிறார். அதற்கு முதல்வர் ஸ்டாலினும் உரிய விளக்கம் கொடுத்து துரைமுருகனை சமாதானப்படுத்தினார் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட பின்னணியில்… முதல்வர் ஸ்டாலினை வழியனுப்பி வைப்பதற்காக விமான நிலையத்திற்கு வந்தார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜ்க்கு சென்று கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மேற்கு வங்கத்தில் பாஜக பந்த்: ஹெல்மெட்டுடன் பேருந்து ஓட்டும் டிரைவர்கள்!