பொள்ளாச்சி பாலியல் வழக்குப்பதிவு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று சவால் விட்டனர். இந்த நிலையில் யார் கூறியது உண்மை என சபாநாயகர் அப்பாவு இன்று (ஜனவரி 11) தீர்ப்பளித்தார்.
கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இந்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் நேற்று அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் சட்டமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர், ”எந்த காரணத்தைக் கொண்டும் நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சிக்க மாட்டோம். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுப்பதுதான் எங்களுடைய கடமை. அதில் எந்த மாற்றமும் கிடையாது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் திரும்பத்திரும்ப இதையே பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியே போனால் நான் பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து விஷயத்தை தொடங்க வேண்டியது இருக்கும்.
பொள்ளாச்சி வழக்கை பொறுத்தவரையில் புகார் வந்தவுடன் அடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை(இன்று) சமர்ப்பிக்கிறேன்.
அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன்” என்று சவால் விட்டார். அதனை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேரவையில் அதிமுக மற்றும் திமுக சார்பில் இன்று காலை ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன.
இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், பொள்ளாச்சி விவகாரத்தில் யார் கூறியது உண்மை என சபாநாயகர் தெரியபடுத்த வேண்டும் என்று கோரினார்.
அதன்படி ”பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக திமுக, அதிமுக இரு கட்சியினரும் தங்களது ஆதாரங்களை இன்று 9.30 மணியளவில் என்னிடம் அளித்தனர். அந்த இரண்டையும் ஆய்வு செய்ததில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் வழங்கிய ஆதாரங்களே உண்மை என்பது தெரிய வந்துள்ளது” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அப்பாவு, “ஆதாரங்களின் படி 19.02.2019 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் புகார் மனு கொடுக்கிறார். அந்த புகார் மனுவை பெற்றுக்கொள்ளாமல் டி.எஸ்.பியை சென்று சந்திக்கும்படி கூறியுள்ளனர். அவர் 19ஆம் தேதி முதல் முயற்சித்தும் 22ஆம் தேதி தான் டிஎஸ்பியை பார்க்க முடிகிறது. அங்கு, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு செல்லுங்கள்’ என்று கூறுகின்றனர்.
அதன்பின்னர் 24ஆம் தேதி தான் பாதிக்கப்பட்ட பெண்ணிடம், ஒரு கையெழுத்து வாங்கி எஃப் ஐ ஆர். பதியப்பட்டது. இதுதான் உண்மை. அதையே தீர்ப்பாக வழங்குகிறேன்” என்று சபாநாயகர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வரப்போகும் புதிய நீதிமன்றங்கள்: எங்கெங்கு தெரியுமா?
அண்ணாமலையாகிய நானும் சொல்கிறேன்… இந்தி குறித்த கேள்விக்கு பதில்!