தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் இந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 4) தெரிவித்துள்ளார். Stalin thanks Tamilisai wishes
மும்மொழிக்கொள்கை விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், மார்ச் 1-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மூன்று மொழிகளில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.
திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள அவர்,
“பாஜக நிர்வாகியான அன்பு சகோதரி தமிழிசை செளந்தரராஜன் எனக்கு ‘மும்மொழி’யில் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி என்னுடைய பிறந்தநாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், சகோதரி மும்மொழியில் வாழ்த்தி தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய ‘பண்பையும்’ காட்டியிருக்கிறார்.
சகோதரி தமிழிசையின் வாழ்த்துச் செய்திக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘இந்தி’ இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.
தமிழ் – ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். உங்களில் ஒருவனான எனக்கு தெலுங்கு தெரியாது. நான் படித்ததும் இல்லை.
தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை, தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து அதனைத் தெரிந்துகொள்ளவில்லை.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார். இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கானப் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், அவர் நம் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ‘தகைசால் தமிழர் விருது’ பெற்ற இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் திருமகள் அல்லவா.
தமிழிசை தெலுங்கு எழுத்துகளில் வாழ்த்துச் செய்தியை எழுதக்கூட அவசியமில்லை என்கிற அளவிற்கு அவருடைய பதிவிலேயே இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அறிய முடிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையின் முன்னேற்றமும், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எழுத்தாகவும் குரலாகவும் மாற்றக்கூடிய வாய்ப்பும் எளிய முறையில் எல்லாரும் பயன்படுத்தும் வகையிலான மென்பொருள்கள் கைபேசிகளிலேயே பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
Google Translate, Chat GPT, Artificial Intelligence போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன. அச்சிடப்பட்ட காகிதத்தைப் படம் எடுத்து, அதை இன்றுள்ள தொழில்நுட்பத்தில் எழுத்துருக்களாக மாற்றி, நாம் எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு மொழியில் உள்ள ஒலிப்பதிவை மற்றொரு மொழியில் மாற்றம் செய்து கொள்ளும் வசதிகளும் உருவாகிவிட்டன. ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.
அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்கு சுமையாகவே அமையும். கல்வியாளர்கள், மொழி அறிஞர்கள், குழந்தைகள் நல செயல்பாட்டாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பார்வை கொண்ட பலரும் இதைத்தான் தெரிவிக்கின்றனர். அறிவியலைப் புறக்கணிக்கும் கட்சியான பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பைக் கட்டாயமாக்குகிறார்கள்.
என் பிறந்தநாளில் தெலுங்கிலும் வாழ்த்துச் சொன்ன தமிழிசை அதனைத் தன் விருப்பத்தின் அடிப்படையில் செய்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. நவீன அறிவியல் தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ள அவரைப் பாராட்டுவதுடன், மும்மொழி என்ன இன்னும் எத்தனை மொழிகளில் வேண்டுமானாலும் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Stalin thanks Tamilisai wishes