ஒட்டுமொத்த அதிமுகவும் பாஜக கண்ட்ரோலுக்கு போய்விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 1) விமர்சனம் செய்துள்ளார். Stalin says aiadmk is bjp control
திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது, “2017-ஆம் ஆண்டு முரசொலி பவள விழாவில் இருந்து நமது கூட்டணி தொடர்கிறது. தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி இத்தனை தேர்தல்களில் தொடர்ந்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய கூட்டணி தோழர்களை மதித்து செயல்பட வேண்டும்.
கூட்டணி கட்சி தலைவர்களுடன் நான் எப்படி நட்போடும் பாச உணர்வோடும் பழகுகிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணி கட்சியோடு சேர்ந்து செயலாற்ற வேண்டும். சில இடங்களில் முரண்பாடு இருக்கலாம். ஆனால், அதனை பேசி விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். அப்போது தான் நமது வெற்றிப் பயணம் தொடரும்.
திமுக கூட்டணி உடையும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நினைத்தார். அதற்காக பல கதைகளை உருவாக்கினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜக கூட்டணியிலிருந்து விலகி நாடகத்தை நடத்தினார். அதனால் திமுக கூட்டணி உடையும் என்று நினைத்தார். ஆனால், அவருடைய எண்ணம் ஈடேறவில்லை.
அதனால் தான் இப்போது டெல்லியில் சென்று அமித்ஷாவை சந்தித்து மீண்டும் பாஜகவிடம் சரணடைந்துள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தை கூட பேசாமல் பவ்வியமாக உட்கார்ந்து இருந்தார்.

சசிகலா, இவரை முதல்வராக அறிவித்தபோது எப்படியெல்லாம் ஆக்ஷன் செய்தாரோ அதே போல நடிக்கிறார். அமித்ஷா காலில் மட்டும் தான் விழவில்லை. விழுந்திருந்தால் ஊர்ந்து போயிருப்பார். ஒருவேளை தனியாக செய்தாரா என்று தெரியவில்லை.
ஒரு மாநிலத்தில் கூட்டணிக்கு எந்த கட்சி தலைமை வகிக்கிறார்களோ, அவர்கள் தானே கூட்டணியை அறிவிப்பார்கள். ஆனால், இங்கு அமித்ஷா அறிவிக்கிறார். ஒட்டுமொத்தமாக அதிமுக பாஜக கண்ட்ரோலுக்கு போய்விட்டது. தமிழகத்தையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்ல தான் பழனிசாமி துடிக்கிறார். அதனால் தான் அமித்ஷா இங்கு அடிக்கடி வருகிறார்.
எந்த ஷா வந்தாலும், தமிழகத்தை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான். பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை என்ன செய்வார்கள் என்று மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்.
மதக்கலவரம், சாதிக்கலவரம், நமது மாணவர்களை படிக்க விட மாட்டார்கள், பிற்போக்குத்தனத்தில் நம்மை மூழ்கடிப்பார்கள், இந்தி மொழியை திணித்து தமிழகத்தின் தனித்துவத்தை அழிப்பார்கள் என்று மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.
அதேநேரத்தில் இன்னொரு பக்கம் நாங்கள் தான் மாற்று என இளைஞர்களை ஏமாற்ற வருகிறார்கள். அவர்களுக்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். திமுக ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சொல்லுங்கள்.
தொண்டர்களின் நம்பிக்கை தான் நமது முதல் பலம். என் கட்சி, என் இயக்கம் என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் நமது தொண்டர்கள். நானும் என் குடும்பமும் கட்சிக்காக இருக்கிறோம். கட்சி எனக்கும் என் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணம் தான் இந்த இயக்கம் 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்பதற்கு காரணம்.
அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத வகையில் சாலை விபத்தில் இறந்துபோகும் சூழல் ஏற்பட்டால், இறந்த குடும்ப வாரிசுகள் 21 வயதிற்கு குறைவாக இருந்தால் அந்த குடும்பத்திற்கு தலைமை கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
திமுக என்ற இயக்கமே இளைஞர்களால் தொடங்கப்பட்டது தான். அதுபோல, இங்குள்ள நிர்வாகிகளும் கட்சியில் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கட்சியில் இன்னும் நிரப்பப்படாத பொறுப்புகளில் இளைஞர்களை நியமியுங்கள். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
எந்த அளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்கு புது ரத்தம் பாயும். செயல்பாடுகள் வேகமாக இருக்கும். வெற்றி உறுதி செய்யப்படும்.
ஜூன் முதல் வாரத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் நான் சந்திக்க போகிறேன். அப்போது அவர்களிடம் நிறைய விஷயங்கள் பேசலாம்” என்றார். Stalin says aiadmk is bjp control