திமுகவின் 90 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 712 புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
மேலும், பயனாளிகளுக்கு தன் கையால் அசைவ உணவு பரிமாறினார். நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மத்திய சென்னை, தென் சென்னையை காட்டிலும் வட சென்னைக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வட சென்னை வளர்ச்சிக்கு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வட சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட சென்னை பகுதியை வளர்ச்சியடைந்த சென்னையாக மாற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “புதுமைப் பெண் திட்டத்திற்கு பிறகு மாணவிகள் எல்லாம் என்னை அப்பா, அப்பா என நெகிழ்ச்சியாக அழைக்கக் கூடிய காட்சிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மாணவர்களுக்காகவும் தமிழ் புதல்வன் திட்டத்தையும் உருவாக்கி மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறோம். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும், “காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை எம்ஜிஆர் சத்துணவுத் திட்டமாக மாற்றினார். அதையும் தாண்டி ஏழை குழந்தைகளின் நலன் கருதி நமது திராவிட மாடல் ஆட்சியில் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் புதுமை பெண், காலை உணவுத் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் இல்லாதவை உங்களைப் பார்க்கும்போது சிறந்த ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதைக் காண முடிகிறது. வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் ஆட்சி நடத்துகிறோம். அப்படிப்பட்ட சிறப்பான ஆட்சிக்கு மக்களாகிய நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.