திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று (ஜூலை 9) திருவாரூருக்கு வருகை தருகிறார். Stalin road show in thiruvarur PoondiKalaivanan plan
சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வருகை தரும் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக திருவாரூர் வருகிறார்.
காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் ஸ்டாலின் அதன் பிறகு இன்று மாலை திருவாரூரில் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.
அதாவது திருவாரூர் நகரை ஒட்டி அமைந்துள்ள பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து ரோடு ஷோவை நடந்தபடி தொடங்குகிறார் ஸ்டாலின்.
துர்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக ரயில்வே ரவுண்டானா வரை நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு ஷோ வில் பங்கேற்கிறார்.
அதன்பிறகு ரயில்வே ரவுண்டானாவில் மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட கலைஞர் சிலையை திறந்து வைக்கிறார்.

சமீப காலமாக ஸ்டாலின் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கே ரோடு ஷோ நடத்தப்படுகிறது.
மக்களுடன் மக்களாக முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து அவர்களுடைய நிறை குறைகளை நேரடியாக கேட்டறிந்து… அதன்படி அடுத்த கட்டம நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார்.
இந்த வகையில்தான், கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரிலும் இன்று ரோடு ஷோ மேற்கொள்கிறார்.
இந்த ரோடு ஷோவில் எத்தனை பேர் பங்கேற்க வேண்டும் என்று மிகத் துல்லியமாக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கணக்கு போட்டிருக்கிறார் என்கிறார்கள் திருவாரூர் திமுக வட்டாரங்களில்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, ”முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் வருகைக்காக மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டங்களைக் கூட்டினார் பூண்டி கலைவாணன். இதில் ஒவ்வொரு நிர்வாகிக்கும் டாஸ்க் அளித்திருக்கிறார்.
அவருடைய கணக்குப்படி முதலமைச்சர் ஸ்டாலின் நான்கு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோவில் வருகிறார்.

ஒவ்வொரு மீட்டரிலும் ஸ்டாலினுக்கு இடது புறம் வலது புறமாக பத்து பத்து பேராக 20 பேர் நிற்க வேண்டும். ஒரு மீட்டர் அளவில் 20 பேர் என்றால் நூறு மீட்டர் அளவில் 2000 பேர் இருக்க வேண்டும். ஆயிரம் மீட்டர் அதாவது ஒரு கிலோ மீட்டர் அளவில் 20000 பேர் இருக்க வேண்டும். மொத்தம் நான்கு கிலோ மீட்டர் அளவிலும் 80 ஆயிரம் பேர் திரண்டு நிற்க வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இடது பக்கம் 40 ஆயிரம் பேர் வலது பக்கம் 40 ஆயிரம் பேர் என்ற கணக்கில் இந்த கூட்டம் நிறுத்தப்பட வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்களுக்கும் இந்த நான்கு கிலோமீட்டரில் எவ்வளவு மீட்டர் என பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஒன்றிய செயலாளர்கள் தங்களுக்கு உட்பட்ட கிளைச் செயலாளர்கள் மூலமாக இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். நகர செயலாளர் தங்களுக்கு உட்பட்ட வட்ட செயலாளர்கள் மூலமாக இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.
கூட்டத்திற்கான செலவு தொகை ஜூலை 6 ஆம் தேதியே அனைத்து நிர்வாகிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு மீட்டரிலும் 20 பேர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு மேல் முதலமைச்சர் ஸ்டாலினை பார்க்க வேண்டும் என்று தன்னெழுச்சியாக வருபவர்கள் தனிக் கணக்கு.
இந்த வகையில் நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு மொத்தம் திமுக நிர்வாகிகள் சார்பில் 80,000 பேர் திரட்டப்பட வேண்டும் என்பதுதான் உத்தரவு” என்று பூண்டி கலைவாணன் கணக்கைப் பற்றி தெரிவித்தார்கள்.
இன்று மாலை நடக்கும் ஸ்டாலின் ரோடு ஷோவுக்காக இன்று காலை முதலே திமுக தொண்டர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவாரூர் நகரத்தில் திரள ஆரம்பித்து விட்டார்கள். Stalin road show in thiruvarur PoondiKalaivanan plan
