எத்தனை ஷா வந்தாலும், கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் மயிலாப்பூர் மேற்கு பகுதி, ஆழ்வார்பேட்டை, 122-வது வட்டம், பாகம் 24-இல் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாடு தலைகுனியாது – என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரையின் முதல் கட்டமாக 68,463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது (SIR) திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் 6.8 லட்சம் பேர் BLO மற்றும் வாக்காளர்களுக்கு உதவிட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்று, “ஒவ்வொரு பூத்திலும் தெருமுனை கூட்டங்கள், வீடு வீடாகச் சென்று கலந்துரையாடல்கள் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்கள் மூலம் அடித்தட்டு அளவில் கழக்கத்தினரை ஈடுபடுத்தி வாக்குச்சாவடி பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், முன்னோடி தலைவர்கள் உட்பட அனைத்து திமுக நிர்வாகிகளும் 2021 சட்டமன்ற தேர்தலை விட கூடுதல் வாக்குகளை தங்கள் வாக்குச்சாவடியில் பெறும் வகையில் தங்களது வாக்குச்சாவடிகளை பலப்படுத்தி வெற்றி வாக்குச்சாவடியாக மாற்றிக்காட்ட வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், வாக்குச்சவாடி குழு உறுப்பினர்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் SIR பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வாக்குச்சாவடிக்கு 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி உறுப்பினருக்கும் அவரவருக்கான இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துக் கொடுத்தார்.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணியினர் கலந்து கொண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள 440 வாக்குகளைப் பெறுவதற்கான வியூகத்தை விவாதித்து அதனை படிவத்தில் குறித்து தலைமையிடம் சமர்ப்பித்தனர்.
இக்கூட்டத்தில், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, மயிலை மேற்கு பகுதி செயலாளர் நந்தனம் மதி, அவைத் தலைவர் ராஜேந்திரன், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், வாக்குச்சாவாடி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
