சென்னையில் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கான கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் வலியுறுத்தினார்

சென்னை உயர்நீதிமன்றம் அமைந்திருக்கக்கூடிய வளாகத்தின் பின்புறமுள்ள காலியிடத்தில் சார்பு நீதிமன்றம் மற்றும் குடும்ப நல நீதிமன்றங்கள் உள்பட,
160 நீதிமன்ற அறைகள் அடங்கிய புதிய கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவானது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்றது.
இதில், தலைமை விருந்தினராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ.315 கோடி மதிப்பீட்டில், புதிய இரண்டு நீதிமன்றங்கள் மற்றும் சென்னை சட்டக்கல்லூரியின் பாரம்பரியமிக்க கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, ராம சுப்பிரமணியம், எம்.எம்.பானர்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
தமிழக அமைச்சர்கள் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்துக்காட்டான, அழகியலான உயர்நீதிமன்றமாக செயல்பட்டு வருகிறது.
பாரம்பரியமான கட்டடங்களை பாதுகாப்பது என்பது, நமது வரலாற்றைப் பாதுகாப்பது போன்றதாகும். அதில் நமது அரசு மிக கவனமாக இருக்கிறது. பாரம்பரியமான கட்டங்கள் அதிகம் உள்ள நகரமாக சென்னை அமைந்துள்ளது.
சென்னையில் ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. அவை அனைத்தையும் ஒரே இடத்திலிருந்து செயல்பட வைக்க வேண்டும். அதுதான் சிறப்பானதாக இருக்கும்.
மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமைய வேண்டும்.
நீதிபதி நியமனங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிகள் இருக்ககூடிய வகையில் அமைய வேண்டும் என்பதை வருகை தந்திருக்கக்கூடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கனிவுடன் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி கவுல் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாதத்துக்குள் இரண்டாவது முறையாக தமிழகத்தில் உச்சநீதிமன்ற கிளை அமையவேண்டும் என நீதிபதிகள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
செல்வம்