பாஜகவிற்கும் திமுகவிற்கும் ரகசிய உறவு இருக்கிறது என்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்வதற்கு திமுகவிற்கு எந்தவித அவசியமும் இல்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 19) பதிலளித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி, நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர் நினைவு நூற்றாண்டு ரூ.100 நாணயத்தை வெளியிட, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வைப் பற்றி, நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,
தமிழ் தமிழ் என்று மூச்சிற்கு முந்நூறு முறை சொல்லும் ஸ்டாலின், தனது அப்பாவின் (கலைஞர்) பெயரில் நாணயம் வெளியிடப் படுவதால்தான், நாணயம் இந்தி மொழியில் அச்சிடப் படும் எனத் தெரிந்தும் அமைதியாக இருந்தார் என்று குற்றம் சாட்டினார்.
மேலும் திமுகவிற்கும் பாஜகவிற்கும் வெகுநாட்களாக ரகசிய உறவு இருக்கிறது என்று நாங்கள் (அதிமுக) தெரிவித்து வந்தோம். இந்நிலையில் நேற்று நடந்த கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டது இதை உறுதிப் படுத்தியுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் விதமாக, தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் இல்லத்தின் திருமண விழாவில் இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், ”எதிர்க்கட்சி தலைவர் என்று ஒருவர் இங்கு(தமிழ்நாட்டில்) இருக்கிறார். அவர் நேற்று கொடுத்த பேட்டியில் ‘தமிழ் தமிழ் என்று முழங்குகிற திமுக வெளியிடும் நாணயம் இந்தியில் இருக்கிறது” என்றிருக்கிறார். அவருக்கு(பழனிசாமி) ஒன்று அரசியல் தெரிந்திருக்கவேண்டும் அல்லது நாட்டு நடப்பு புரிந்திருக்கவேண்டும் அல்லது மண்டையில் மூளையாவது இருக்கவேண்டும். இந்த கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீடு மத்திய அரசு அனுமதியுடன், அவர்கள் மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சி.
இதற்கு முன் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், அண்ணா போன்ற தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் எழுத்துகள் இருக்கும். ஆனால் அண்ணாவிற்கு நாணயம் வெளியிட்ட பொழுது, அதில் அண்ணாவின் தமிழ் கையெழுத்தை கலைஞர் இடம்பெற வைத்தார்.
அதே போலக் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தில் ‘தமிழ் வெல்லும்’ என்ற கலைஞருக்கு பிடித்த வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதைக்கூடப் பார்க்காத ஒரு எதிர்க் கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கிறார்” என்று ஸ்டாலின் பேசினார்.
ராகுல் காந்தியை ஏன் அழைக்கவில்லை என்ற பழனிசாமியின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ”இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு, திமுக அரசு அல்ல. கலைஞருக்கு நாணயம் வெளியிட்டது ஒன்றிய அரசு, அதனால் தான் ஒன்றிய அமைச்சரை அழைத்து நாணயம் வெளியிட்டது திமுக அரசு” என்றார் ஸ்டாலின்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ”நாங்கள் பாஜவுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள திமுகவிற்கு எந்த அவசியமும் இல்லை. திமுகவை பொறுத்தவரை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் கொள்கையின் அடிப்படையில் தான் இருக்கும் என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சொல்லி இருக்கிறார், அது ஒன்றே எங்களுக்கு (திமுக)போதும். எல்லோருக்கும் உரிய மரியாதையைத் தருவோம். நமக்கென்று(தமிழ் நாடு) இருக்கிற உரிமையை ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்று பேசினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
முதல்வரின் இணை செயலாளராக லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்!
”எனக்கு தமிழே பிடிக்காது காரணம் என்ன தெரியுமா?” – நடிகை சங்கீதா