ஈரோடு சித்தோடு பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இன்று (ஏப்ரல் 2) முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
ஈரோடு பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் வாழ்ந்து வளர்ந்த ஊர். பெரியார் இல்லையென்றால் அண்ணா இல்லை; அண்ணா இல்லையென்றால் கலைஞர் இல்லை; கலைஞர் இல்லையென்றால் நாமெல்லாம் இல்லை. அந்த வகையில், அனைத்துக்கும் தொடக்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிடப் பேரூர் தான் இந்த ஈரோடு. இந்தத் திராவிடப் பேரூரில் இன்று நான் கேட்கிறேன் – மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா? என்று கூட்டத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர், ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் முத்துசாமி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சுந்தரம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் மதிமுகவைச் சேர்ந்தவருமான செந்தில்நாதன், பெருந்துறை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோப்பு வெங்கடாசலம், அந்தியூர் தொகுதி வேட்பாளர் சிவபாலன், கோபிசெட்டிபாளையம் வேட்பாளர் என். நல்லசிவம், பவானி சட்டமன்ற வேட்பாளர் கே.ஏ. சந்திரசேகர், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சுவாமிநாதன் ஆகியோருக்கு வாக்குகளைச் சேகரித்தார்.
அதேபோல் ஈரோடு கிழக்கில் ராகுல் காந்தி அறிவிக்கும் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர், “திராவிட மாடல் என்று சொன்னோம். அது டெவலப்மெண்ட் மாடல். வளர்ச்சி என்பது அனைத்துத் துறை வளர்ச்சியாக, அனைத்துத் தரப்பு மக்களுக்கான வளர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களுக்கான வளர்ச்சியாக இருக்க வேண்டும்” என்று திட்டமிட்டு, ஒவ்வொரு திட்டத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்தோம் என்றார்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்திற்கு செய்யப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டம், ஈரோடு மஞ்சள் ஆராய்ச்சி மையத் தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு திமுக அரசின் நலத் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.
மேலும் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், “பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை உள்ளதா? திமுகவின் பொல்லாத ஆட்சிக்கு இன்று எத்தனையோ உதாரணங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று ஒட்டுமொத்த தமிழகமும் சொன்னது. “அண்ணா அடிக்காதீங்க… அண்ணா வலிக்குது” என்று அப்பாவி பெண்கள் கண்ணீரோடு கதறியது இப்போதும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அந்தக் கதறல் கூட பழனிசாமியின் மனசாட்சியைத் தொடவில்லையா? பொள்ளாச்சி வழக்கில் எப்படிப்பட்ட நாடகங்களை எல்லாம் நடத்தினார் எடப்பாடி பழனிசாமி? முதலில் வழக்கு போடாமல் இழுத்தடித்தார். பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டார். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களைப் பொதுவெளியில் சொல்லி மிரட்டல் விடுத்தார்.ஆனால், அந்த வழக்கையும் முறையாக நடத்தி, குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வாங்கித் தந்து, 85 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் வாங்கித் தந்த ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.பொள்ளாச்சி வழக்கு மட்டுமல்ல.
ஒரு பெண் எஸ்.பி.க்கு டி.ஜி.பி. பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவரை பாதுகாத்தது யார்? இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அன்றைய முதல்வர் பழனிசாமி தானே? அந்தப் பெண் எஸ்.பி.யை வழிமறித்து ஒரு டி.ஜி.பி. மிரட்டியது பழனிசாமி ஆட்சியில்தானே? இந்த வழக்கில்கூட தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்.இது மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிமுக ஆட்சியில் பெரிய வரலாறு உள்ளது. தர்மபுரியில் பேருந்தில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்களே? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மீது ஆசிட் வீச்சு என்று பெண்களுக்கு எதிரான அதிமுக செய்துள்ள பாதகங்கள் குறித்து பெரிய லிஸ்ட் போடலாம்.
ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் அளவிற்கு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது பழனிசாமி ஆட்சியில்.. ஆனால் பெண்களை பாதுகாத்து கல்லூரிகளுக்கும் வேலைகளுக்கும் அனுப்பி வைத்து தலை நிமிர வைத்து உற்ற தோழனாக உள்ளது திராவிட மாடல் ஆட்சி. இந்த உண்மைகளை எல்லாம் பொய் செய்திகளையும், அவதூறுகளையும் பரப்பி மறைக்கலாம் திசை திருப்பலாம் என்று கருதி பாஜகவின் என்டிஏ ஆட்சியை கொண்டு வந்து தமிழகத்தை கபளிகரம் செய்துவிடலாம் என்று கற்பனைக்கோட்டையில் இன்று எடப்பாடி உலா வந்து கொண்டிருக்கிறார்” என்று காட்டமான விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.
