“45 நிமிஷம்” ஸ்டாலின்-மோடி மீட்டிங்… பேசியது என்ன?

Published On:

| By Minnambalam Login1

stalin press meet delhi

பிரதமர் மோடியிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று(செப்டம்பர் 27) காலை பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

சுமார் 45 நிமிடங்கள் நடந்த சந்திப்பை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது அவர்,  “ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று மூன்று முக்கியமான கோரிக்கைகளை நான் பிரதமரிடத்தில் வலியுறுத்தி இருக்கிறேன்.

அதனுடைய சாரம்சம் முழுமையாக, தெளிவாக எங்களுடைய கோரிக்கைகளை எழுதி அவரிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம்.

முதலில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தியது போலவே, இரண்டாவது கட்டப் பணிகளையும் செயல்படுத்தவேண்டும் என்பது தமிழ்நாட்டின் நிலைப்பாடு.

இதற்கான  நிதி ஒதுக்கப்படும்  என்று ஒன்றிய நிதி அமைச்சர் 2021-2022-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தார்.

இதை தொடர்ந்து, ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம், இதற்கான ஒப்புதலை, 2021-ஆம் ஆண்டே வழங்கியது.

இந்தப் பணிகளுக்கு, இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருந்தாலும், இதுவரைக்கும் ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்படாத காரணத்தால், இதற்கான ஒன்றிய அரசின் நிதி, தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவில்லை.

இதனால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எனவே, தாமதமின்றி இந்த நிதியை உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று நான் கேட்டிருக்கிறேன்.

இரண்டாவதாக, ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதியையும், தமிழ்நாடு 40 விழுக்காடு நிதியையும் அளித்து செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ், இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு வழங்க வேண்டியது 2,152 கோடி ரூபாய்.

இந்தத் தொகையில், முதல் தவணை இதுவரைக்கும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை.

Image

இந்தத் திட்டத்தின்கீழ் கையெழுத்திடப்பட வேண்டிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு அரசு கையெழுத்திடாததே இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையின் பல நல்ல கூறுகளை, ஏற்கனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்திருக்கிறது. செயல்படுத்திக் கொண்டும் வருகிறது.

எந்த ஒரு மாநிலத்தின் மீதும், மொழித் திணிப்பு இருக்காது என்று தேசிய கல்விக்கொள்கை உறுதியளித்திருந்தாலும், இந்தத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இதற்கான ஷரத்து இல்லை.

எனவே, இந்த ஒப்பந்தம் திருத்தப்படவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் சொல்லிக் கொண்டு வருகிறோம்.

இந்தச் சூழ்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாத காரணம் காட்டி, ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்ற சூழல் உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

மூன்றாவதாக, தமிழ்நாட்டு மீனவர்கள் சந்தித்து வருகின்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

நம்முடைய பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், மீன் பிடிக்கப் போகும் நம்முடைய மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்து துன்புறுத்துகிறார்கள்.

இதுபற்றி பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நான் பலமுறை வலியுறுத்தியும், கடிதம் எழுதியும், இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

191 மீன்பிடிப் படகுகளும், 145 மீனவர்களும் தற்போது இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே, உடனடியாக நம்முடைய ஒன்றிய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி, இந்த மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடிப் படகுகளையும் மீன்பிடிக் கருவிகளையும் உடனடியாக விடுவித்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்க தேவையான இந்த முக்கிய கோரிக்கைகளை மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிறைவேற்றுவார்” என்று நம்புகிறேன் என்று பேசினார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கேள்விகள் எழுப்பினர்.

கடந்தமுறை பிரதமரை சந்தித்த போது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது, இந்த முறை சந்தித்த போது அவரது அணுகுமுறை எப்படி இருந்தது?

அவர் பிரதமராக சந்தித்தார். நான் முதல்வராக சந்தித்தேன், அவ்வளவுதான். அனைத்து கோரிக்கைகளையும் பொறுமையாக கேட்டறிந்தார்.  கடந்த முறை 15 நிமிடம் தான் நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தமுறை சுமார் 45 நிமிடங்கள் வரை பேசியிருக்கிறோம். இதிலிருந்து சந்திப்பு எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறியலாம்.

புதிய கல்வி கொள்கை பற்றி நீங்கள் பேசியிருக்கிறீர்களா? 

அதிகாரிகளுடன் கலந்துப் பேசி சொல்வதாக பிரதமர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்தது பற்றி

வரக்கூடிய காலக்கட்டத்தில் நீதிமன்றத்தில் போராடி அவர் விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது அவருக்கும் இருக்கிறது.

ஒன்றிய அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது ?

கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் நாங்கள் எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்

சோனியா காந்தியை சந்தித்துள்ளீர்களே?

மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்.

இறுதியாக, காவிரி விவகாரம் குறித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒன்றிய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாக சொல்லி இருப்பது பற்றின கேள்விக்கு “அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது” என்று பதிலளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

சென்னை – சொத்து வரி மீண்டும் உயர்வு : தீர்மானம் நிறைவேற்றம்!

ஏடிஎம் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் கே.ஆர்.ஸ்ரீராம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share