முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 15) அரியலூரில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
பின்னர் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் ” கடலாக இருந்து நிலமாகி மனித இனம் தோன்றியதற்கான தடயங்கள் கொண்ட ஊர் இந்த அரியலூர். அதன் அடையாளமாகத்தான் கல்லங்குறிச்சியில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டது.
ஒரு காலத்தில், மிக அடர்ந்த வனப்பகுதியாக இருந்து ‘பெரும்புலியூர்’ என்று அழைக்கப்பட்ட பகுதி. இந்த பெரம்பலூர். இப்படிப்பட்ட வரலாறு கொண்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கான அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
அரியலூர், ஆற்றல் மிக மாவட்டமாகவும், பெரம்பலூர் பெரும்பலம் கொண்ட மாவட்டமாகவும் அமைய வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் அரியலூர் மாவட்டத்தில் முடிவுற்ற 51 பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன்.
26 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 10 ஆயிரத்து 141 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற 456 பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன், 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 11 ஆயிரத்து 721 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.
இந்த விழாவை, அரசுப் பெருவிழாவாக ஏற்பாடு செய்திருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ‘அரியலூர் அரிமா’ எஸ்.எஸ்.சிவசங்கருக்கும், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தின் ஆட்சியர்களுக்கும், அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
இந்த விழாவிற்காக மட்டுமல்ல, இன்னும் பல பாராட்டுகளுக்கு தகுதியானவர் நம்முடைய சிவசங்கர். 2021 மே 7-ஆம் தேதி ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று பதவியேற்றேன். பதவியேற்று, கோட்டைக்கு வந்து நான் போட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கு கட்டணமில்லாத விடியல் பயணத் திட்டத்திற்குதான்.
இந்த மகத்தான திட்டத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகின்றவர்தான், நம்முடைய சிவசங்கர் என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், பண்டிகைக் காலங்களில் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்படும்போது பேருந்துகள் கிடைக்காமல் நெருக்கடியை சந்தித்தார்கள்.
இன்றைக்கு நிலைமை மாறி இருக்கிறது. சமீபத்தில் தீப ஒளி நாள் விடுமுறைக்கு சென்னையிலிருந்து மக்கள் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டபோது. ‘கடைசி பேருந்தும் புறப்பட்ட பிறகுதான் நான் அரியலூருக்கு புறப்படுவேன்’ என்று போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு அரியலூருக்கு வந்தவர்தான் சிவசங்கர்.
எனவே, அவருடைய பணிகளை நான் மனதார பாராட்டுகிறேன். இதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியும், பெருமையும் இருக்கிறது. ஏனென்றால், சிவசங்கர் அரசியலில் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருந்த அண்ணன் சிவசுப்பிரமணியனுடைய மகன். என்னால் வார்ப்பிக்கப்பட்டவர் சிவசங்கர்”என்று பாராட்டினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சீனாவில் வெளியாகும் ‘மகாராஜா’!
பெருங்களத்தூர் பாலத்தில் ஏறிய சிவகார்த்திகேயன் : வீடியோ!
தியேட்டரில் இருந்து ரசிகர்கள் தலைவலியுடன் செல்லக்கூடாது- கங்குவா டீமுக்கு ரசூல் பூக்குட்டி அட்வைஸ்!