மக்களவையில் தமிழகத்தின் பலத்தை குறைக்க சதி: மோடியை சாடிய ஸ்டாலின்

Published On:

| By Selvam

மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், பிகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

ADVERTISEMENT

இதுகுறித்து இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தமிழகத்தின் தற்போதைய 38 மக்களவை தொகுதிகள் 31-ஆகவும், ஆந்திரபிரதேசம் 42-லிருந்து 34-ஆக குறையும் என்றும் அதேநேரத்தில் பிகார் 40-லிருந்து 50, உத்தரபிரதேசம் 80-லிருந்து 91-ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த செய்தியை குறிப்பிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம்  தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

ADVERTISEMENT

தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும், கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா?

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பாஜக அரசு செல்லாக் காசாக்கி விடும். வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

மோடியின் பாஜகவுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுகவுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பாஜகவையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அதிமுகவையும் புறக்கணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Gold Rate: வரலாறு காணாத உச்சம்… சவரன் ரூ.54,960க்கு விற்பனை

இந்தா பாத்துக்க… சென்னையில் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share