அதிமுகவை விட திமுகதான் அதிக இடங்களில் வெற்றிபெற்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் கணினி கல்வியகம் அறக்கட்டளையை திமுக உருவாக்கி உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த படித்த பெண்களுக்கு இலவச பயிற்சி அளித்து வேலை வாய்ப்பும் வழங்கப்படும். இந்த நிலையில் கணினி பயிற்சி மையம் திறக்கும் நிகழ்வு சைதாப்பேட்டை பஜார் சாலையில் இன்று (ஜனவரி 5) நடைபெற்றது. அதேபோல சென்னை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வும் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு கணினி பயிற்சி மையம், கலைஞர் சிலை ஆகியவற்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “1967ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் வெற்றிபெற்றபோது திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார், கலைஞர் பொதுப் பணித் துறை அமைச்சரானார். 1971ஆம் ஆண்டு மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றிபெற்று முதல்வரானார். ஆகவே, சைதாப்பேட்டை கலைஞருடைய பேட்டை. இங்கு சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பேசிய ஸ்டாலின், “உள்ளாட்சித் தேர்தலில் வழக்கமாக ஆளுங்கட்சிதான் அதிக இடங்களில் வெற்றிபெறும். ஆளுங்கட்சியினருக்கு ஓட்டுப்போட்டால்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணிகள் நடைபெறும் என்கிற மக்களின் எண்ணம் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிகாலத்தில் ஊரகப் பகுதிகளில் அதிக இடங்களில் அதிமுக வெற்றிபெற்றாலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இடங்களைக் கைப்பற்றியது திமுகதான். அதுவும் தற்போது மாற்றப்பட்டு ஊரகப் பகுதிகளிலும் திமுக கொடிகட்டி பறக்கக் கூடிய நிலை வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.
அதிமுகவும் திமுகவும் சரிசமமாக வெற்றிபெற்றுள்ளார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், “முந்திரிக்கொட்டை அமைச்சர் ஒருவர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு இது வளர்பிறை காலம். திமுகவுக்கு இது தேய்பிறை காலம் என அப்பட்டமாக பொய் சொல்கிறார். ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 2100 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 1781 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எப்படி ஜெயித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். தோல்வியடைந்தவர்களை எல்லாம் வெற்றிபெற வைத்தனர். இதுபோலதான் மாவட்ட கவுன்சிலர் இடங்களில் நடந்துள்ளது” என்று விளக்கினார்.
