இளையராஜாவின் வீடு தேடிச் சென்ற ஸ்டாலின்- என்ன பேசிக் கொண்டார்கள் தெரியுமா?

Published On:

| By Aara

நேற்று (மார்ச் 1) திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி, பலரும் அவரது வீடு தேடிச் சென்று வாழ்த்தினர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 2) காலை இசைஞானி இளையராஜாவின் வீடு தேடிச் சென்று வாழ்த்தியிருக்கிறார். Stalin meets maestro Ilaiyaraja

ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் இளையராஜா.

அதற்காக அவர் சில நாட்களுக்கு முன்பே சென்னையில் இருந்து புறப்பட இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினும் நாகை சுற்றுப் பயணத்துக்காக இன்று சென்னையில் இருந்து புறப்படுகிறார்.

இதனால் இளையராஜாவின் சிம்பொனி அரங்கேற்றத்துக்காக வாழ்த்து சொல்வதற்காக இன்று அவரது வீட்டுக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு சார்பா வாழ்த்துகள்…

வாசலுக்கே வந்து முதல்வரை வரவேற்றார் இளையராஜா.

’சிம்பொனி சாதனை நிகழ்த்தப் போற உங்களுக்கு  தமிழ்நாடு அரசு சார்பாவும், என் சார்பாவும் தலைவர் கலைஞர் சார்பாவும் வாழ்த்துகள்’ என்று ஸ்டாலின் கூற கை கூப்பி நன்றி தெரிவித்தார் இளையராஜா.

‘ஐயாதான் இசை ஞானினு வச்சாரு. அதை மாத்தவே முடியலை…’ என்று ராஜா சிரித்தபடியே சொல்ல,

’எவ்வளவு பட்டம் வந்தாலும் உங்களுக்கு இதுதான் நிக்கிது…இசைஞானியா உலக அளவுல தமிழர்கள் எல்லாருடைய உள்ளங்கள்லயும் இல்லங்கள்லயும் நீங்கதான் இப்ப குடியிருக்கீங்க’ என்று பதில்கூறினார் முதல்வர் ஸ்டாலின். ஆமாம் ஆமாம் என ஆமோதித்தார் இளையராஜா.

கார்ல போகும்போதெல்லாம்…

’ஜூன் தேர்டு உங்க பர்த்டேவையே அப்பாவுக்காக நீங்க மாத்திக்கீட்டிங்க இல்ல… என்று ஸ்டாலின் கேட்க, ‘அப்பாவுக்காக…’ என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார் இளையராஜா.

’இன்னொரு பியூட்டி என்னன்னா…  சமீபத்தில எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பேர்ல ஒரு சாலையை திறந்தோம்ல… எஸ்.பி.பி. பாடின பாட்டுகளோட சி.டி. எனக்கு கொடுத்தாங்க. அதுல பெரும்பாலும் உங்க இசையில பாடின பாடல்கள்தான். கார்ல போகும்போதெல்லாம் அதைத்தான் கேட்டுக்கிட்டிருக்கேன்’ என்றார்  முதல்வர் ஸ்டாலின். Stalin meets maestro Ilaiyaraja

இந்த சந்திப்பின் போது லண்டனில் தான் அரங்கேற்றவுள்ள சிம்பொனி பற்றி  முதல்வரிடம் விளக்கிய ராஜா, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் காட்டி மகிழ்ந்தார். Stalin meets maestro Ilaiyaraja

சிம்பொனி அரங்கேற்றம் செய்து அடுத்த சிம்மாசனத்தில் அமர இருக்கும் இசைஞானியை தமிழ்நாடு முதல்வர் என்ற முறையில் வீடு தேடிச் சென்று ஸ்டாலின் வாழ்த்தியது சமூக தளங்களில் நெகிழ்வையும் மகிழ்வையும் பரவச் செய்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுடன் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இளையராஜா இல்லத்துக்கு சென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share