ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்… புறப்பட்டார் ஸ்டாலின்

Published On:

| By christopher

Stalin leaves for European tour from chennai

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஒருவார பயணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 30) காலை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் செல்கின்றனர்.

ADVERTISEMENT

இதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி புறப்பட்டு சென்றார்.

அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கப்பாண்டியன் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசுகையில், “ஒருவார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். வரும் செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை திரும்புகிறேன்.

இந்த பயணத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2021ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி பணிகள் தொடங்கி விட்டன.

இந்த வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிபரங்களே சாட்சி. தமிழ்நாடு அமைதியான, திறமையான இளைஞர்கள் இருக்கக்கூடிய மாநிலமாக உள்ளது. அதனைக் கூறி தான் முதலீடுகளை ஈர்த்து வருகிறேன்.

இதுவரை ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 36 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அதன்மூலம் 18 ஆயிரத்து 498 கோடிக்கான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன.

இதன் தொடர்ச்சியாக தான் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். அங்கு மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் தமிழக மக்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும்.

இந்த பயணத்தில் சிறப்பு நிகழ்வாக செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்போர்டில் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள சுயமரியாதை கருத்தருங்கில் கலந்துகொண்டு, பெரியார் படத்தை திறந்து வைக்கிறேன்” என ஸ்டாலின் பேசினார்.

ஐரோப்பிய பயண விவரம்!

இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஸ்டாலின், இன்று இரவு 9 மணிக்கு ஜெர்மனி சென்றடைகிறார். அங்கு அவருக்கு அயலக தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு நாளை (ஆகஸ்ட் 31) முதலீட்டாளர்களை சந்திக்கிறார்.

அத்துடன் ஜெர்மனி ப்யணத்தை முடித்துக்கொண்டு, செப்டம்பர் 1ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு புறப்படுகிறார். 2ஆம் தேதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தொழில்முனைவோரை சந்திக்கிறார். 3ஆம் தேதி லண்டனில் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் தொடங்க அழைப்பு விடுக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக 4ஆம் தேதி லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் நிகழ்வுகளில் பங்கேற்று பெரியார் படத்தை திறந்து வைக்கிறார். 6-ம் தேதியும் அயலக தமிழர் நலவாரிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார். பின்னர் இங்கிலாந்தில் இருந்து 7ஆம் தேதி புறப்பட்டு, 8ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share