‘அம்மா’வுக்கு மாற்றாக உருவாகும் ‘அப்பா ‘ பிராண்ட் : சிடுசிடுக்கும் அதிமுக… காய் நகர்த்தும் திமுக!

Published On:

| By Kumaresan M

அதிமுகவினரின் நெஞ்சத்தில் அம்மா என்ற வார்த்தைக்கு தனி இடம் உண்டு. அம்மா என்கிற வார்த்தை அவர்களை புளகாங்கிதம் அடைய வைக்கும் . வார்த்தைக்கு வார்த்தை எங்கள் அம்மா , எங்கள் அம்மா என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினர் குறிப்பிடுவார்கள். இப்போது, அம்மா என்ற வார்த்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் ‘ அப்பா’ என்ற வார்த்தையை அடையாளப்படுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக கட்டப்பட்டுள்ள, 712 குடியிப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசிய போது, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என, தேர்தல் நேரத்தில் அறிவிக்காத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. stalin launched appa app

இன்றைக்கு மாணவ ,மாணவியர் இளையதலைமுறையினர் எல்லாம் என்னை பார்த்து, ‘அப்பா அப்பா’ என்று அழைக்கக்கூடிய உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சியான காட்சிகளை பார்த்திருப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சிறப்பான ஆட்சிக்கு மக்கள் என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்’ என்று பேசியிருந்தார்.

அம்மா என்ற வார்த்தைக்கு எதிர்ப்பதமாக அப்பா என்று வார்த்தை ஸ்டாலின் சுட்டி காட்டியதால், காட்டமான அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் , “இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு. மானம், சூடு , சுரணை உள்ளவர்கள் தந்தையை பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.” என காட்டமாக பேசியிருந்தார்.

அதிமுக பொதுசெயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியோ, ‘தன்னை இளையதலைமுறையினர் அப்பா என்று கூப்பிடுவதால் ஸ்டாலின் மகிழ்ச்சியடைவதாக கூறுகிறார். ஆனால், சிறுமிகள் பாலியல் தொல்லையால் கதறும் போது ஸ்டாலினின் காது மந்தமாகி விடுகிறது’ என்று பதிலடி கொடுத்தார்.

அதிமுகவின் எதிர்ப்பையடுத்து, திமுகவினர் ‘ அப்பா ‘ என்ற வார்த்தையை பிராண்டாக கொண்டு வரும் முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடலூரில் ‘அப்பா’ (Anaithu Palli Parents teachers Association)என்ற ஆப்பை தொடங்கி வைக்க இன்று ( பிப்ரவரி 22 ஆம் தேதி ) கடலூருக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றார். அப்போது, சாலையோரங்களில் விழுப்புரம் மாவட்டம் சார்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்களில், அப்பா என்ற வார்த்தையை அதிகமாக பார்க்க முடிந்தது. மரக்காணம் கூட்ரோடு அருகே இறையானூரில் பள்ளி குழந்தைகளை வைத்து ஸ்டாலினை பார்த்து அப்பா அப்பா என்று அழைக்க வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் செய்திருந்ததாக தெரிகிறது.இளையதலைமுறையின் கோஷத்தை கேட்டபடியே முதல்வர் ஸ்டாலின் கடலூர் சென்றடைந்தார்.

பின்னர், அங்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ விழாவில், ‘அப்பா’ என்ற புதிய ஆப்பை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அப்பா ஆப் செயல்படும் முறை குறித்த வீடியோவும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர்கள், ஆசிரியர்களை உள்ளடக்கிய செயலியாக அப்பா ஆப் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ , மாணவிகள் தங்களுக்குள்ள எந்த குறையை பற்றியும் இந்த ஆப் வழியாக தெரிவிக்க முடியும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share