சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் இன்று (செப்டம்பர் 17) மாலை திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா நடைபெற்றது.
இந்த விழாவின் தொடக்கத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் மறைந்த முதல்வர் கலைஞர் பேசுவது போல ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் முதல்வர் ஸ்டாலின் அருகில் கலைஞர் அமர்ந்து “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! தந்தை பெரியார் வடித்த கொள்கையை, பேரறிஞர் அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டிக் காக்கப்பட்ட இனமான இயக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்து, கம்பீரமாகக் கழகத்தை ஆட்சிப் பொறுப்பில் அமரச்செய்திருக்கும் தம்பி மு.க ஸ்டாலின் அவர்களை எண்ணி எண்ணி எனது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.
ஸ்டாலின் என்றாலே உழைப்பு, உழைப்பு, உழைப்பு தான். கழக களப்பணியில் 55 ஆண்டுகளாய் அயராது உழைக்கிறவர், திராவிட செம்மலாய், இந்தியாவின் முன்மாதிரி முதல்வராய், நல்லுலகம் போற்றும் நாயகராய் விளங்குகிறார்.
சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி இவற்றின் பாதையில் திமுக ஆட்சியை அவர் மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். இனமானம், மொழிமானம், சுயமரியாதையைக் கண் போல் காக்கும் அவரது கடமை உணர்வைக் கண்டு நான் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ். ஓங்குக திராவிட மாடல் அரசு” என்று கலைஞர் பேசினார். கலைஞரின் இப்பேச்சை முதல்வர் ஸ்டாலின் கண்கள் கலங்கியபடியே பார்த்துக்கொண்டிருந்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கெஜ்ரிவால் ராஜினாமா… ஆட்சியமைக்க உரிமை கோரினார் அதிஷி
“நம்முடைய டார்கெட் 2026 எலெக்ஷன்” – பவள விழாவில் ஸ்டாலின் பேச்சு!