கோவை வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 25) செம்மொழி பூங்காவை திறந்து வைக்க உள்ளார்.
கோவையில் கடந்த 2010 ஆம் ஆண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அப்போதைய முதல்வர் கலைஞர் கோவை காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் செம்மொழிப் பூங்கா திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வந்த பிறகு செம்மொழிப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பில் ரூ. 208 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடந்து வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று கோவை வரும் முதல்வர் செம்மொழிப் பூங்காவை திறந்து வைக்க உள்ளார்.
பின்னர் பூங்காவில் உள்ள செம்மொழி வனம், மூலிகை தோட்டம், புதிர் தோட்டம், ஆரோக்கிய வனம், நீர் வனம், பாறை வனம், பூஞ்சோலை, என பூங்காவின் பல பகுதிகளை பார்வையிட உள்ளார்.
பூங்காவில் 2000க்கும் மேற்பட்ட தாவர வகைகளை சேர்ந்த 5,00,000க்கும் மேற்பட்ட செடிகள் உள்ளன. இவற்றில் அழிந்து வரும் நிலையில் உள்ள சிவப்பு பட்டியலில் உள்ள மற்றும் மிக அபாயகரமான நிலையில் உள்ள தாவர வகைகளும் வைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்ட பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆடிட்டோரியத்தில் கோவை சார்ந்த தொழிலதிபர்கள், பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட முக்கிய முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார்.
முதல்வர் கோவை வருகையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
