நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான, கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் கொண்ட குழுவை ஸ்டாலின் இன்று (மார்ச் 9) அமைத்துள்ளார். Stalin important decision meeting
கடந்த மார்ச் 5-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், அனைத்து மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், இந்த பிரச்சனை தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் ஏழு மாநில முதல்வர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்,
கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்பிக்கள் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு வங்கத்திற்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, ஆந்திராவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கேரளாவுக்கு ஐடி துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஒடிசா மாநிலத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Stalin important decision meeting