தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மார்ச் 14ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 25) தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. Stalin important decision at the cabinet meeting
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “நிதிநிலை அறிக்கை குறித்த விளக்கங்களை அந்த துறை அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இக்கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறோம். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதனால் வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றிருக்கக்கூடிய 40 கட்சியினரை அழைக்க முடிவு செய்து அவர்களுக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்த அனைத்துக கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஏனென்றால் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவுக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.
எல்லா வளர்ச்சி குறியீடுகளிலும் முதன்மையாக இருக்கக்கூடிய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 39 நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு 2026ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய போகிறது. மக்கள் தொகையை கணக்கிட்டுதான் இது செய்யப்படும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் முக்கியமான இலக்கு. அந்த இலக்கை பொறுத்தவரை தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது.
பல பத்தாண்டுகளாக குடும்ப கட்டுப்பாட்டை, பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முயற்சிகள் மூலம் நாம் சாதித்திருக்கிறோம். மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளை குறைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள். நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைகிறதே என்ற கவலையில்லை, இது தமிழ்நாட்டின் உரிமை சார்ந்தது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து, அரசியலை கடந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல நீட் பிரச்சினை, நிதி பிரச்சினை ஆகியவற்றுக்காக எம்.பி.க்கள் அதிகமாக இருந்தால் தான் குரல் கொடுக்க முடியும் என்று தெரிவித்த ஸ்டாலின், இன்னுமொரு மொழிப்போருக்கு ஒன்றிய அரசு வித்திடுகிறது. அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
மும்மொழி கொள்கை, புதிய தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், இதை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் தமிழ்நாடு அரசுக்கு ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
இந்தநிலையில் மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று நமது மின்னம்பலத்தில் மோடிக்கு எதிராக ஸ்டாலின் வெளியிடும் முக்கிய அறிவிப்பு! என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் குறிப்பிட்டிருந்தோம். அந்த வகையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். Stalin important decision at the cabinet meeting