ஏடிஎம் கூடுதல் கட்டணம்… பாதிப்புகளை பட்டியலிட்ட ஸ்டாலின்

Published On:

| By Selvam

“ஏடிஎம்-இல் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும்” என்ற நோக்கத்தையே சிதைத்துவிடும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 30) தெரிவித்துள்ளார். Stalin highlights ATM deduction

வங்கி சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் ஐந்து முறை எந்தவித பிடித்தமுமின்றி ஏடிஎம் சேவையை பயன்படுத்தலாம்.

ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் சேவையை பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ.21 பிடித்தம் செய்யப்படும். இந்தநிலையில், வரும் மே 1-ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 உயர்த்தி ரூ.23 வரை வங்கிகள் பிடித்தம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.

அடுத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள்.

தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். Stalin highlights ATM deduction

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share