முதல்வரின் வெளிநாட்டு பயணம் – முதலீட்டை ஈர்க்கவா? செய்யவா? : ஈபிஎஸுக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி!

Published On:

| By Kavi

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) அரசு முறை பயணமாக ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

முதலீடுகளை ஈர்ப்பதற்காக செல்வதாக புறப்படுவதற்கு முன் விமான நிலையத்தில் பேட்டி அளித்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தநிலையில் முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 30) அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிப்பாரா?

ஆரம்பம் முதல் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன்.

ADVERTISEMENT

ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும்.

கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆனால் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த ‘சின்ன கலைவாணர்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விவேக்கின் நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது.

‘இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா?’ என்று விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் ‘ஒன்றுமே இல்லை’ என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் அதுதான் மக்களுக்கும்’ – என்பார்!

அதுபோல் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து.

ஸ்டாலின், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிவுக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அறிக்கை என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதை புள்ளிவிவரங்களுடன் பல முறை அறிக்கையாகத் தந்திருக்கிறோம்.

அவர் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதனைப் பொறுக்கமுடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார்.

முதலமைச்சர் தனது ஐரோப்பிய பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, இதுவரை தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள முதலீடுகள், வேலைவாய்ப்புகள் பற்றி செய்தியாளர்களிடம் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அறியாமை அறிக்கைக்கு பதிலளிப்பதைவிட, ஜெர்மனி-இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முதலீட்டாளர்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முதலீடு கொண்டு வருவதில்தான் திராவிட மாடல் அரசு இப்போது கவனம் செலுத்துகிறது.

தான் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போன்டா சாப்பிட்டதையே மிகப் பெரிய சாதனையாக கருதிக்கொண்டிருக்கும் பழனிசாமிக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் உள்ள நுணுக்கங்கள் பற்றி புரிதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை.

தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நம் முதலமைச்சரின் இந்த ஐரோப்பிய பயணமும், நம் மாநிலத்திற்கான முதலீடுகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்.

அப்போது எதிர்க்கட்சித்தலைவருக்கு கூடுதல் வயிற்றெரிச்சல் ஏற்பட்டால், தரமான சிகிச்சை அளிக்கும் மருத்துவக் கட்டமைப்பும் திராவிட மாடல் அரசில் சிறப்பாக உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share