வைஃபை ஆன் செய்ததும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய வீடியோ காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு, வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாடு அரசுக்கு ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை ஒதுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த வாரம் காசியில் பேட்டி கொடுத்தார்.
பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும்…
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், துணை முதலமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் என அரசுத் தரப்பில் இருந்தும், மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். Stalin announcement against Modi
இந்த விவகாரம் தொடர்பாக கெட் அவுட் மோடி என்று திமுகவும் கெட் அவுட் ஸ்டாலின் என்று பாஜகவும் சமூக தளங்களில் ட்ரெண்டிங் செய்ய தொடங்கினர்.
இப்படிப்பட்ட சூழலில் தான் நேற்று (பிப்ரவரி 21) கடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால், தமிழ்நாடு மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய வரியை நிறுத்துவதற்கு ஒரு நொடி போதும்’ என்ற ரீதியில் பேசியது பரபரப்பானது.
பிரதான் பேச்சு… பாஜகவுக்கு சென்ற ரிப்போர்ட்!

இதற்கிடையே, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுடைய பேச்சு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக கடுமையான கொந்தளிப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது என்ற ரிப்போர்ட் டெல்லியை சென்றடைந்தது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் எந்த முக்கிய அரசியல் கட்சியும் பாஜகவோடு கூட்டணி சேருவதற்கு தயங்குகிற ஒரு சூழல் உருவாகிவிட்டது என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. Stalin announcement against Modi
இந்தப் பின்னணியில் தான் நிதி தர முடியாது என்று மறுத்த அதே தர்மேந்திர பிரதான் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு பதில் கடிதம் எழுதி இருந்தார். அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை அணுக வேண்டும் என அன்போடு கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று (பிப்ரவரி 22) கடலூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையின் அபாயங்களை பட்டியலிட்டார்.
மேலும், ’2000 கோடி ரூபாய் கல்வி நிதியை பெறுவதற்காக தமிழ்நாடு 2000 வருடங்கள் பின்னோக்கி செல்வதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசு பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் கூட தேசிய கல்விக் கொள்கையில் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கையெழுத்திட மாட்டான்’ என ஆவேசமாக அறிவித்தார். Stalin announcement against Modi
அறிவாலய ஆலோசனை!
இதே நேரம் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் இந்த விவகாரத்தை அடுத்தடுத்து எவ்வாறு எடுத்து செல்வது என்பது பற்றிய ஆலோசனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. திமுகவின் வியூக செயல்படுத்தும் அமைப்பான ’பென்’ அமைப்பிலும் இது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன்படி வருகிற சட்டமன்றத் தேர்தல் வரை இந்த பிரச்சனையை ஆற போட விடக்கூடாது, திமுகவின் 23 அணிகளும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சுமார் 40 லட்சம் மாணவர்களுக்கு மேல் பயன்பட வேண்டிய அந்த நிதியை மோடி அரசு ஒதுக்காமல் இருப்பதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இதை ஒரு தொடர் பிரச்சார இயக்கமாக மாற்ற வேண்டும் என திமுக முடிவெடுத்துள்ளது.
நேற்று மாணவர் அணி ஆலோசனை கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதற்கு முன்னதாக அனைத்துக் கட்சி மாணவர் அமைப்புகளின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. வரும் பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கல்வி நிதி தர மறுக்கும் மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை மாணவரணி, மற்ற மாணவர் கூட்டமைப்போடு சேர்ந்து முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
ஸ்டாலினுக்காக காத்திருக்கும் மாணவரணி

மேலும், அடுத்தடுத்து மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்களை அழித்தல், ரயில் மறியல் செய்தல் உள்ளிட்ட போராட்ட வடிவங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டன. இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடைய சம்மதம் பெற்ற பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம் என மாணவர் அணி செயலாளர் எழிலரசன் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார். Stalin announcement against Modi
அதேபோல ஐடி விங் மாநில நிர்வாகிகள் கூட்டமும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஒவ்வொரு துறை ரீதியாகவும் மோடி அரசு தமிழ்நாட்டை எப்படி வஞ்சிக்கிறது என்பது பற்றிய புள்ளி விவரங்களோடு கூடிய உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது பற்றி ஐடி விங் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
மகளிர் அணி சார்பில் ஒவ்வொரு வார்டு, ஒவ்வொரு கிளை வரை வீட்டு வாசல்களில் மோடி அரசுக்கு எதிரான கோலங்களை இட்டு, அதை சமூக தளங்களில் பதிவேற்ற வேண்டும் தலைமைக்கும் போட்டோக்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு அணியும் அந்தந்த வகையில் இந்த பிரச்சனையை மக்களிடம் தீவிரமாக எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில உரிமைகள் தொடர்பான மிக முக்கியமான ஒரு அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். மோடி அரசுக்கு எதிரான மிக முக்கியமான போராட்ட அறிவிப்பாக அது இருக்கக்கூடும் என்றும் சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸ் அப்.
