கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு காரணமானது பாலியல் பலாத்காரமோ, கொலையோ இல்லை என உறுதியாக கருத்து தெரிவித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மின்னம்பலம்.காம் வெளியிட்ட விரிவான புலனாய்வு செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த உண்மைகளையே சென்னை உயர் நீதிமன்றம் தன் ஆணித்தரமான கருத்தாகவும் பதிவு செய்திருக்கிறது.

கடந்த ஜூலை 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியின் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
பெற்றோர் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூறினார்கள். ஒரு சில நாட்களில் இந்த பிரச்சினை சாதிப் பிரச்சினையாக பரிணாமம் பெற்றது.
மரணம் அடைந்த மாணவியின் சமுதாயத்தினர், ‘நம்ம உறவுப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கு. வாங்க போராடுவோம்’ என வாட்ஸ் அப்புகளில் வதந்தி தீயை பற்ற வைத்தனர்.
ஸ்ரீமதி பாலியல் ரீதியாக பள்ளிக்குள் துன்புறுத்தப்பட்டதாகவும் அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர்கள் தகவல்களைப் பரப்பினர்.
இதில் வேறுசில சாதி அமைப்புகளும் ஒன்று சேர்ந்தது. இதையடுத்து ஜூலை 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு பெருங்கூட்டம் திரண்டது.
சிதம்பரம், தஞ்சாவூரில் இருந்தெல்லாம் டூ வீலர்களில் வந்த நபர்கள் ஸ்ரீமதி படித்த பள்ளிக்கு தீ வைப்பது, அடித்து உடைப்பது என்று துவம்சம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வன்முறை பெரும் பதற்றத்தை கிளப்பியது.

யூகம்… யூகம்…
இன்னொரு பக்கம் மாணவி ஸ்ரீமதியின் மரணம் பற்றி தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும், யூடியூப் ஊடகங்களிலும், சிலபல அச்சு ஊடகங்களிலும்,
மிகத் தவறான மிக மேலோட்டமான அந்த மாணவி இறப்புக்குப் பின்னும் அவரை கொச்சைப்படுத்தும் படியான செய்திகளை தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.
ஸ்ரீமதியின் கேரக்டரை குறிவைத்து பரபரப்பு கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீமதி பள்ளி வளாகத்துக்குள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று யூகங்களின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவர்கள் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்கள்.

சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல சமூக ஒழுங்கும்
இந்த நிலையில்தான் மின்னம்பலம் இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினையும் கூட என்பதை உணர்ந்து நிதானமாக, தெளிவாக பக்க சார்பின்றி புலனாய்வில் ஈடுபட்டது.
நமது கள விசாரணையிலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுக் குழுவினரின் விசாரணையிலும் கிடைத்த உண்மைகளை மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி யூகங்களுக்கு வேலை இல்லாமல் நடைமுறை சாத்தியங்களின் படியே புலனாய்வு செய்தோம்.
மின்னம்பலத்தின் துல்லிய ரிப்போர்ட்
அதன் முடிவில் ஸ்ரீமதி தனது பள்ளி ஆசிரியர்கள் திட்டியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார் என்பதை கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி மின்னம்பலத்தில், ‘ மாணவி ஸ்ரீமதி கொலையா, தற்கொலையா? இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன? துல்லிய ரிப்போர்ட்’ என்ற தலைப்பில் ஆதாரங்களோடு எக்ஸ்குளுசிவ் செய்தியாக வெளியிட்டோம்.
அந்த செய்தியோடு ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை 5.20 மணிக்கு பள்ளி ஊழியர் வழக்கமான முறையில் சுற்றி வர அப்போது ஒரு மாணவி கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து பதறி வார்டனுக்கு தகவல் கொடுக்கிறார்.
ஊழியர்கள் ஸ்ரீமதியை தூக்கிக் கொண்டு அந்த அதிகாலையில் பதறியபடியே ஓடும் சிசிடிவி காட்சிகளை மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்றாலும்… பள்ளி நிர்வாகம் இரவு நேர தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தால் ஸ்ரீமதியை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியிருக்கலாம் என்றும்,
பள்ளி ஹாஸ்டல் மாடிகளில் இருந்து உணர்ச்சிவசப்பட்டோ தவறியோ கீழே விழுவதைத் தடுக்கும் வகையில் கட்டிட அமைப்புகள் இல்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் பெரும் கவனக் குறைவையும் அந்த செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
அதிகாரிகளுக்கே மிரட்டல்
மின்னம்பலத்தின் செய்தி வெளியானதும் சில உயர் போலீஸ் அதிகாரிகளும், நமது சில ஊடக நண்பர்களுமே கூட, ‘அந்த வீடியோ எப்படி மின்னம்பலத்துக்குப் போச்சு?’ என்று விசாரணைக் குழுவினரை வறுத்து எடுத்திருக்கிறார்கள்.
ஸ்ரீமதியை ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் தூக்கிக் கொண்டு ஓடும் வீடியோவை மின்னம்பலம் வெளியிட்டதைத் தொடர்ந்து பல மீடியாக்களும் அதை அப்படியே எடுத்து வெளியிட்டார்கள்.
மின்னம்பலம் செய்திக்குப் பிறகும் கூட சில ஊடகங்கள் ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும், பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்றும் பல்வேறு திசை திருப்பல்களில் ஈடுபட்டனர்.
சிபிசிஐடி எச்சரிக்கை

இந்த நிலையில்தான் ஆகஸ்டு 5 ஆம் தேதி கள்ளக்குறிச்சி வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார் ஓர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டனர்.
அதில், “விழுப்புரம் குற்றப் புலனாய்வுத் துறையினர் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் அனைத்து கோணங்களிலும் புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வழக்கின் புலன் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் இது தொடர்பாக தங்கள் சொந்தக் கருத்துகளையும், காணொளிக் காட்சிகளையும் வெளியிட்டும் மேலும் இது தொடர்பாக இணையான புலன் விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குற்றப் புலனாய்வுத் துறையின் புலனாய்வை பாதிக்கும் வகையில் இருக்கிறது.
எனவே புலன் விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் எவ்விதமான பதிவு மற்றும் காணொளிக் காட்சிகளை ஊடகங்கள், சமூக தளங்களில் வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்” என்று தெரிவித்திருந்தனர்.

மின்னம்பலத்திடம் இந்த வழக்கு தொடர்பான உண்மையான தகவல்கள் வந்தபோதும் சிபிசிஐடி போலீஸாரின் அறிவுப்புக்கு இணங்க நாம் வெளியிடவில்லை.
மின்னம்பலம் புலனாய்வை உறுதிப்படுத்திய நீதிமன்றம்!
இந்த நிலையில்தான் ஆகஸ்டு 29 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கனியமூர் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஜாமீன் நிபந்தனைகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவாக வழங்கினார்.
அந்த நீதிமன்ற உத்தரவில் ஆகஸ்டு 3 ஆம் தேதி மின்னம்பலம் புலனாய்வுக் கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்ட பல விஷயங்கள் நீதிபதியால் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

“மாணவி ஸ்ரீமதி எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, ‘அவரை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளவர், நன்றாகப் படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஓர் அங்கமே தவிர, தற்கொலைக்குத் தூண்டும் செயல் அல்ல.
இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட தமிழக மருத்துவக் குழுவின் அறிக்கை மீது நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் குழு கொடுத்த அறிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
அந்த அறிக்கையின்படி, மாணவி மரணத்துக்கு காரணம், பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகிறது. மேலும், மாணவியின் பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அதில் ஆதாரம் ஏதுமில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டு, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.
சக மாணவிகள் அளித்த வாக்குமூலத்தில், ”மாணவி இறந்த முதல்நாள் ஜூலை 12ஆம் தேதி கெமிஸ்ட்ரி பாடத்தில் வரும் ஈகுவேஷனை மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதியால் போடமுடியவில்லை.
அதனால் கெமிஸ்ட்ரி ஆசிரியை, மாணவிக்கு அறிவுரை சொன்னார். இதை ஹாஸ்ட்டலில் மாணவிகளை கவனித்து வரும் கணித ஆசிரியையிடம் ஸ்ரீமதி தகவல் தெரிவித்தார்” என்று கூறியுள்ளனர்.
அதுபோன்று, மாணவி மூன்றாவது மாடியில் இருந்து விழும்போது, மரத்தில் அடிபட்டதாலேயே அவருக்கு உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்திருக்கிறது என மருத்துவ அறிக்கைகளில் தெளிவாக தெரியவருகிறது.
மேலும், பள்ளியின் 3வது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தம் அல்ல. அது ஒரு வண்ணப் பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது. மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மாணவி ஸ்ரீமதி வேதியியல் பாடம் படிப்பதில் சிரமப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.

அதனால் இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதில் ஆதாரங்கள் இல்லை.
எனவே தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்தது தவறு” என உயர் நீதிமன்ற நீதிபதி இள்ந்திரையன் எழுத்துபூர்வமாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
ஊடக அறத்தோடு மின்னம்பலம்
கள்ளக்குறிச்சி சம்பவம் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல தமிழகத்தைத் தாண்டியும் பள்ளி மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மனதில் கிலியை ஏற்படுத்தியது. மேலும் ஆசிரிய சமுதாயமும் மனதளவில் இந்த சம்பவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என சமூகத்தின் மிக முக்கியமான அங்கத்தினர்கள் பாதிக்கப்பட்ட இந்த சம்பவத்தில் வீண் பரபரப்புகளை கிளப்பி குறுகிய கால புகழுக்குக் குறி வைக்காமல்…. உண்மையை மட்டுமே ஊடக அறமாக கருதி செய்தி வெளியிட்டது மின்னம்பலம். நாம் வெளியிட்ட துல்லிய ரிப்போர்ட்தான் உயர் நீதிமன்ற உத்தரவிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.உண்மையோடும் உங்களோடும் என்றும் நடைபோடும் மின்னம்பலம்!
