இலங்கையில் புகழ்பெற்ற இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் பிரசன்ன விதாங்கே. ஆகாச குசும், புரஹந்தா கலுவரா உள்ளிட்ட இவரது சில படங்கள் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றவை. ரோஷன் மேத்யூஸ், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் இவர் இயக்கிய ‘தி பாரடைஸ்’ திரைப்படம் கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. srilankan director prasanna praises Mani Ratnam!
இப்படம் தற்போது முபி (MUBI) ஓடிடி தளத்தில் வெளியாகிப் பரவலான வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலையாளம், சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்று பல மொழிகளைக் கொண்டது ‘தி பாரடைஸ்’ உள்ளடக்கம். ஆனாலும், அப்படத்தில் பேசப்பட்ட பொருளாதார அரசியலைத் தாண்டி அதன் திரைமொழி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
இப்படமானது இயக்குனர் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மூலமாக இந்தியாவில் வெளியிடப்பட்டது.

‘தி பாரடைஸ்’ படம் பற்றி ஒரு இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ள பிரசன்ன விதாங்கே, அந்த படத்தை வெளியிடும் முடிவை மணிரத்னம் 24 மணி நேரத்தில் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், தனக்கும் மணிரத்னத்திற்குமான நட்பு எப்போது தொடங்கியது என்றும் தெரிவித்திருக்கிறார்.
“என்னோட முதல் படம் தவிர்த்து, மற்ற படங்களுக்கு எல்லாம் சென்னையில் தான் பின்தயாரிப்பு பணிகள் நடந்திருக்கின்றன. அனைத்துக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் தான்.
அதேபோல, மணிரத்னத்தின் படங்களிலும் அவரே படத்தொகுப்பாளர். அந்த வகையில், எனது ஒவ்வொரு படத்தையும் மணிரத்னத்திடம் காண்பித்திருக்கிறேன். அதேபோல, என்னால் முடிந்த அளவுக்கு அவரது படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இப்படி எங்களது நட்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது” என்று கூறியிருக்கிறார் பிரசன்ன விதாங்கே.
பரஸ்பர மரியாதை மற்றும் அன்பு தங்களிடையே இருந்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.
“பாரடைஸ் படத்தைப் பார்க்க மணிரத்னத்திற்கு அழைப்பு விடுத்தேன். அதனைப் பார்த்துவிட்டு பாராட்டினார். இதனை இந்தியாவில் உங்களது பேனரில் வெளியிட முடியுமா என்று அவரிடம் கேட்டேன்.
ஒரே நாளில் அவரது அலுவலகத்தில் இருந்து ‘ஓகே’ எனப் பதில் வந்தது. அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரது பேனரில் வெளியிட்டதால்தான், அந்தப் படம் இந்தியாவில் நிறைய ரசிகர்களைச் சென்றடைந்தது” என்று பதிலளித்திருக்கிறார் பிரசன்ன விதாங்கே.
‘தி பாரடைஸ்’ பட வெளியீடு தொடர்பாகப் பணப் பரிமாற்றம் எதுவும் நடக்கவில்லை என்றும், இது போன்ற ஆதரவு மிகவும் அரிதானது என்றும் அந்தப் பேட்டியில் மணிரத்னத்தைப் புகழ்ந்திருக்கிறார் இயக்குனர் பிரசன்ன விதாங்கே.
