தொடங்கியது இலங்கை அதிபர் தேர்தல்… மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

Published On:

| By Abdul Rafik B

Srilanka to hold election for new president today, 3 candidates in the fray

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடங்கியுள்ளது. 1978ஆம் ஆண்டை தொடர்ந்து 44ஆண்டுகளுக்கு பிறகு இன்று நாடாளுமன்றம் மூலம் அதிபர் தேர்தெடுக்கப்படவுள்ளார்.

கோத்தபய ராஜபக்சே கடந்த வாரம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக ஜூலை 19ஆம் தேதி காலை அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனை அடுத்து அதிபர் பதவிக்கான தேர்தல் மும்முனை போட்டியாக மாறி உள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. டலஸ் அழகப்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவர் அனுர குமார திசநாயக்கே ஆகியோர் அதிபர் பதவிக்கான போட்டிக் களத்தில் உள்ளனர்.

இதில் ரணில் விக்கிரமசிங்கே ஏற்கனவே 6 முறை இலங்கை பிரதமராக இருந்த அனுபவம் மிக்கவர். மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், மக்கள் போராட்டம் ஓயாததால் ஜூலை 9ஆம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த வாரம் கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்கே

தற்போது அதிபர் பதவிக்கான போட்டியில் இறங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கேவுக்கு மஹிந்த ராஜபக்‌சேயின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு உள்ளது. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 145 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அதிபருக்கான தேர்தலில் ரணில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

டலஸ் அழகப்பெரும

ரணில் விக்கிரமசிங்கேக்கு எதிராக அதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த டலஸ் அழகப்பெரும களமிறங்கியுள்ளார். முன்னாள் கல்வி அமைச்சராக பணியாற்றிய இவருக்கு அதிபர் பதவியில் எந்த முன் அனுபவமும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின்ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு உள்ளது. மேலும், ஸ்ரீலங்க பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் சிலரும் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ரணிலுக்கும் டலஸ் அழகப்பெருவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

அனுர திசாநாயக்க

மூன்றாவதாக களத்தில் உள்ள அனுர திசநாயக்கேவுக்கு பெரிய ஆதரவு எதுவும் இல்லை. அவரது ஜனதா விமுக்தி பெரமுன கட்சி கூட்டணியில் வெறும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிபர் தேர்தலை சந்திக்க உள்ள இலங்கைக்கு உதவியாக இருப்போம் என இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கையின் ஜனநாயகம், நிலைத்தன்மை, மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா ஆதரவாக இருக்கும் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

1978ஆம் ஆண்டுக்கு பிறகு 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றதேர்தல்களில் மக்கள் வாக்கு மூலம் அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

~அப்துல் ராபிக் பகுருதீன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share