இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடி வரும் நிலையில் இதையடுத்து அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும்கட்சியினரின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு வலியுறுத்தி வருகின்றார்கள். இதை முன்னிட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி இரவு பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்வது என முடிவெடுத்துள்ளனர் ராஜினாமா கடிதத்தை அவர்கள் பிரதமரிடமும் அளித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி விலகுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அவை முன்னவரும் ஆளும்கட்சியின் மூத்த அமைச்சருமான தினேஷ் குணவர்தன இந்த தகவலை உறுதிபடுத்தியிருக்கிறார்.
இன்று ஏப்ரல் 4ஆம் தேதி காலை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மஹிந்த ராஜபக்சே சந்தித்து ஒட்டுமொத்த அமைச்சர்களின் ராஜினாமா பற்றி விவாதிக்கிறார்.
இந்த நிலையில் இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முற்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்தாலும்… இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதை அடுத்தே இந்த முடிவுக்கு அமைச்சர்கள் வந்திருப்பதாக இலங்கை பத்திரிகையாளர்கள் சமூகதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
“அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை நாட்டில் ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தியிருக்கும் நிலையில் அதற்கு விரைவில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால் நாடாளுமன்றத்தில் தற்போது சாதாரண பெரும்பான்மைகூட ராஜபக்சே அரசுக்கு இல்லை. கூட்டணிக் கட்சியினரின் வெளியேற்றம், ஆளுங்கட்சியினர் அதிருப்தி ஆகியவற்றுக்கிடையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கான பெரும்பான்மை தற்போது ஒவ்வொரு நாளும் குறைந்துகொண்டே வருகிறது. இந்த நிலையில்தான் பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து என்ற வகையில் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை முன்கூட்டியே ராஜினாமா செய்யத் தொடங்கிவிட்டார்கள்” என்கிறார்கள் இலங்கை நாடாளுமன்றத்தை கவனிக்கும் பத்திரிகையாளர்கள்.
இது ஒருபுறமிருக்க… கடந்த ஜனவரியில் வழங்கப்பட்ட 400 மில்லியன் டாலர் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட இவ்வாண்டின் முதல் காலாண்டில் இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடன் உதவி வழங்கப்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள இந்திய ஹை கமிஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியாவின் 500 பில்லியன் டாலர் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வந்த 40,000 மெட்ரிக் டன் டீசலை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லேவிடம் இருந்து இலங்கை மின்சக்தித் துறை அமைச்சர் காமினி லொக்குகே நேற்று பெற்றுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் பொருளாதார நெருக்கடி, இன்னொருபக்கம் அரசியல் நெருக்கடி என இலங்கை தத்தளித்து வருகிறது.
– வேந்தன்
